விளையாட்டு அரங்குகள், வசதிகளைக் கூடுதலானோர் பயன்படுத்த வகைசெய்வது, திடல்தட வீரர்கள், உடற்குறையுள்ள திடல்தட விளையாட்டு ஆகியவற்றுக்கு அரசாங்கம் முதலீடு செய்கிறது.
அதன் மூலம் சமூகங்களை ஒன்றிணைப்பதும் தேசிய பெருமித உணர்வை மேம்படுத்துவதும் நோக்கம்.
கலாசார, சமூக, இளையர்துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா அவ்வாறு கூறினார்.
“வெற்றி பெறுவதும் நம் இலக்குதான். இருப்பினும் எது ‘வெற்றி’ என்பதை நாம் துல்லியமாக வரையறுக்க வேண்டும். அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளோடு போட்டி போட இயலாது என்பதை நாம் உணர்ந்து கொள்வதும் முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
வெற்றி என்பது பதக்கங்களை வெல்வது மட்டுமன்று. அவை வெற்றியின் ஓர் அங்கம் மட்டுமே என்று குறிப்பிட்ட திரு சுவா, அரசாங்கம் 8 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களின் திடல்தடத் திறனை மேம்படுத்த உதவும் விளையாட்டுக் கட்டமைப்பை உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
“இதனைக் கருத்தில்கொண்டே அரசாங்கம் அண்மைய ஆண்டுகளில் ஆண்டுக்கு $90 மில்லியனை விளையாட்டு மேம்பாட்டிற்காகச் செலவிடுகிறது,” என்றார் திரு சுவா.
அந்தத் தொகை விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொது விளையாட்டு வசதிகளை அமைக்கப் பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரின் விளையாட்டுக் கட்டமைப்பு தொடர்பான விரிவான மதிப்பீட்டு முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேமஸ் லிம் (செங்காங் குழுத்தொகுதி), ஃபைசால் மனாப் (அல்ஜுனிட் குழுத்தொகுதி) இருவரும் முன்வைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அது தொடர்பான ஐந்தரை மணி நேர விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்துரைத்த பிறகு திரு சுவா தமது விளக்கத்தை அளித்தார்.


