சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை விற்பதாகக் கூறி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயல்கள் மீண்டும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இவற்றால் ஏமாற்றப்பட்ட குறைந்தது 462 பேர் மொத்தமாக குறைந்தபட்சம் 480,000 வெள்ளியைப் பறிகொடுத்துள்ளனர்.
டெய்லர் சுவிஃப்ட், கோல்ட்பிளே போன்ற உலகப் பிரபல இசைக் கலைஞர்கள் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளைப் படைப்பதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.
கெரோசல், ஃபேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர், சியாவ்ஹொங்ஷு போன்ற தளங்களில் நுழைவுச்சீட்டு விளம்பரங்கள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் இந்த விவரங்களை வெளியிட்டனர். மோசடிக்கு ஆளாகி போலி மின்னிலக்க நுழைவுச்சீட்டுகளைப் பெறுவோர் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படாதபோது உண்மை நிலவரத்தை உணர்வர் என்று காவல்துறை குறிப்பிட்டது.
இணையத்தில் பொருள்களை வாங்கும்போது விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக நுழைவுச்சீட்டுகளை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.