தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிடவ்ட் ரோட் விவகாரம்: காணொளியை அகற்றி மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

1 mins read
4ea0cf3b-8526-47d1-8bd1-d4b8613f01ea
அண்மைய நாடாளுமன்ற அமர்வில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு காணொளியுடன் கூடிய பதிவை அக்கட்சி அகற்றியுள்ளது.

அந்தப் பதிவு, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் வண்ணம் அமைந்திருந்ததாக அவைத் தலைவர் இந்திராணி ராஜா கூறியிருந்தார். அதற்கு இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு அப்பதிவு அகற்றப்பட்டது.

வியாழக்கிழமை இரவு 10 மணிக்குள் பதிவை அகற்றவேண்டும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய்க்குக் கெடு வழங்கப்பட்டிருந்தது.

ரிடவ்ட் ரோட் விவகாரம் தொடர்பில் அப்பதிவு தவறான கருத்துகளைப் பரப்புவதாக பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி புதன்கிழமையன்று கூறியிருந்தார்.

அதற்குப் பிறகு பதிவு மாற்றியமைக்கப்பட்டது.

எனினும், அதன் பின்னரும் பதிவு சரியில்லை என்று குமாரி இந்திராணி வலியுறுத்தினார். பதிவை அகற்றாவிட்டால் இந்த விவகாரம், நாடாளுமன்ற சலுகைகள் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

நாடாளுமன்ற சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக வரும் புகார்களை அக்குழு விசாரிக்கும்.

திங்கட்கிழமையன்று ரிடவ்ட் ரோட் விவகாரத்தில் அமைச்சர்நிலை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டன. இதன் தொடர்பில் திரு லியோங்கிற்கு கேள்விகள் கேட்க அனுமதி வழங்கப்படவில்லை என்ற கருத்தை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற காணொளி கொடுத்ததாக குமாரி இந்திராணி கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்