அப்பர் தாம்சன் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஓர் 70 வயது ஆடவர் உயிரிழந்தார். கவனமின்றி வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்ததன் தொடர்பில் ஓர் 26 வயது லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வேறிருவரின் உடல்நலனையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். எனினும், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.
சம்பவம் பதிவான காணொளிகளை இணையத்தில் பலர் பகிர்ந்துகொண்டனர். சம்பவ இடத்தில் குறைந்தது மூன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் இருந்தது காணொளிகளில் தெரிந்தது.
ஐந்து தடங்கள் இருக்கும் சாலையில் நான்கு போக்குவரத்துக்கு மூடப்பட்டன.
ஒரு கார், பேருந்து, லாரி, வேன் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து வெள்ளிக்கிழமை காலை 10.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் தெரிவித்தனர். அதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் போனது.
டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த அவசர மருத்துவ உதவிக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது அங்கு ஓர் ஆடவர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்தார். அதிகாரிகள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அவசர மருத்துவ வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு ஆடவர் மாண்டார்.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.