வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் ஓர் உற்பத்தி நிறுவனத்துக்கு 200,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.
மேலும், வைடிஎல் கான்கிரீட் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநரான டான் சீ கியோங்கிற்கும் 125,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதென மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.
அவர், சம்பவம் நிகழ்ந்த வேலைத் தளத்தில் தினமும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவர். ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டாக அவர் அந்தத் தளத்துக்குப் போகவில்லை. அதோடு, வேலை தொடர்பான இடர்களைக் குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர் நடைமுறைப்படுத்தவில்லை.
“பொறுப்புணர்வின்றி நடந்துகொண்டதுடன் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்காததால் ஓர் உயிர் பறிபோனது,” என்று மனிதவள அமைச்சு கூறியது. இச்சம்பவம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று நிகழ்ந்தது.