தேர்வுகளுக்கு தாளில் பேனாவால் எழுதி விடையளிக்கும் முறை சிறிது, சிறிதாக விடைபெற்று, மின்னணு விடையளிப்புமுறை இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் ஜிசிஇ எனப்படும் பொதுக் கல்விச் சான்றிதழுக்கான தாய்மொழிப் பாடத் தேர்வுகள் சிலவற்றுக்கு 2013ஆம் ஆண்டில் மின்னணுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது 60 தேர்வுகளுக்கு அந்த விடையளிப்புமுறை பின்பற்றப்படுவதாக சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்தது.
வாய்மொழித் தேர்வு, எழுத்துத் தேர்வு, கணினி அடிப்படையிலான செய்முறைத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு மின்னணு விடையளிப்புமுறையில் மாணவர்கள் பதிலளிக்கின்றனர்.
மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் எதிர்கால வேலையிடங்களுக்கும் தேவையான போட்டித்தன்மையை வளர்த்துக்கொள்ள இது உதவுவதாக கழகத்தின் பேச்சாளர் கூறினார்.
21ஆம் நூற்றாண்டுக்கான போட்டித்தன்மைத் திறன்களைக் கல்வி அமைச்சு அடையாளம்கண்டு பட்டியலிட்டுள்ளது. அவை உலகளாவிய வாழ்க்கைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தக்கூடியவை.
புத்தாக்கச் சிந்தனையாற்றல் போன்ற அம்சங்களை மின்னணு விடையளிப்புமுறை மூலமாக எளிதில் மதிப்பிட இயலும் என்று சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் குறிப்பிட்டது. தாளில் பேனாவால் எழுதி விடையளிக்கும்முறையில் அது சாத்தியமில்லை என்று அது கூறியது.

