மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் இதுவரை 67,000 பேர் பதிவு

3 mins read
f14a463b-d6d0-498b-a95f-b7e42fab1859
பிரதமர் லீ சியன் லூங் (நடுவில் சிவப்பு உடை), சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (வலமிருந்து 3வது) இருவரும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்ட சாலைக்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பிரதமர் லீ சியன் லூங் (நடுவில் சிவப்பு உடை), சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (வலமிருந்து 3வது) இருவரும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்ட சாலைக்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  
பிரதமர் லீ சியன் லூங் (நடுவில் சிவப்பு உடை), சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (வலமிருந்து 3வது) இருவரும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்ட சாலைக்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்களுக்கு நோய் வருமுன் தடுக்கும் உத்தியான மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி (ஹெல்தியர் எஸ்ஜி) செயல்திட்டத்தில் ஏறக்குறைய 67,000 பேர் சேர்ந்து இருக்கிறார்கள்.

அந்தச் செயல்திட்டம் தொடர்பான முதலாவது சாலைக்காட்சி சனிக்கிழமை பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நடந்தது. அதையொட்டி, சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.

பிரதமர் லீ சியன் லூங் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்திற்கான பதிவு ஒரு சில நாள்களுக்கு முன்பு தான் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 4,000 பேர் சேர்ந்தனர்.

இதை வைத்துப் பார்க்கையில் அந்தத் திட்டத்திற்கு நல்ல ஆதரவு இருக்கிறது. இருந்தாலும் இதில் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் ஜூலை 5 முதல் 60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்கள் பதியலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தகுதி உள்ளவர்களுக்கு ஹெல்த்ஹப் என்ற செயலி வழியாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு பதிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, அவர்கள் இந்தச் செயல்திட்டத்தில் சேர்ந்துகொண்டிருக்கும் மருந்தகங்களில் அல்லது பலதுறை மருந்தகத்தில் பதிந்து கொள்ளலாம்.

அதைச் செய்ததும் இலவசமாக மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவதற்கு முன்பதிவையும் அவர்கள் செய்துகொள்ள முடியும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனிநபர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கடந்த மே மாதம் முதலே தனியார் மருத்துவர்களிடம் தங்களைப் பதிந்துகொண்டவர்கள்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம் பற்றி 2022ல் அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உடல்[Ϟ]நலனை நன்கு பார்த்துக்கொள்ள உதவியாக குடும்ப மருத்துவர்களை நியமிப்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

குடும்ப மருத்துவர்களும் குடியிருப்பாளர்களும் சேர்ந்து உடல்நலத் திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்படுவார்கள். அதன்படி வாழ்க்கைப்பாணி மாற்றங்களும் காலக்கிரம முறைப்படி உடல்நலனைப் பரிசோதித்துக்கொள்ளும் நடைமுறையும் நடப்புக்கு வரும்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் பதிந்துகொள்ளும் குடியிருப்பாளர்கள் ஆண்டுதோறும் தங்கள் உடல்[Ϟ]நலனை இலவசமாக பரிசோதித்துக்கொள்ளலாம்.

தேசிய அளவில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளை அவர்கள் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.

தனியார் மருந்தகங்களில் கொடுக்கப்படும் மருந்துகளின் விலை, பலதுறை மருந்தகங்களில் கொடுக்கப்படும் மருந்துகளின் விலையை ஏறக்குறைய ஒத்து இருக்கும்.

‘‘பதிந்துகொள்வது என்பது முதல் கட்டம். அதையடுத்து குடியிருப்பாளர்கள் முதல் [Ϟ]முறை மருத்துவரைப் பார்த்து பிறகு தொடர்ந்து தங்கள் உடல்நலனை மனதில் வைத்து செயல்பட்டு வரவேண்டும்,’’ என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பெரும்பாலானவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்திற்குத் தகுதியானவர்களை எட்டும் வகையில் அமைச்சு ஜூலை முதல் நவம்பர் வரை 17 சாலைக் காட்சிகளை நடத்துகிறது. அதில் முதலாவது சாலைக் காட்சி சனிக்கிழமை நடந்தது.

இந்தத் திட்டத்தில் சேர குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி தூதர்கள் ஏறக்குறைய 1,000 பேர் பிரித்துவிடப்படுவார்கள்.

கைப்பேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்த தெரியாத முதியவர்கள், சமூக நிலையங்களுக்கும் சமூக மன்றங்களுக்கும் சென்று அந்தத் தூதர்கள் மூலம் பயன்பெறலாம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்