50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஃபேர்பிரைசின் புத்தக வெளியீடு

50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஃபேர்பிரைசின் புத்தக வெளியீடு

2 mins read
6fe629f4-0bb2-474c-8e4f-3dc0dccb4a7b
‘த பிரைஸ் ஆஃப் பீயிங் ஃபேர்’ எனும் புத்தகம் ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் வளர்ச்சிப் பாதையைக் குறிக்கிறது. - படம்: நட்கிராஃப்

சிங்கப்பூரில் மளிகை சாமான்களின் சில்லறை விற்பனையில் முதலிடம் வகிக்கும் ஃபேர்பிரைஸ் பேரங்காடி அதன் 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ‘த பிரைஸ் ஆஃப் பீயிங் ஃபேர்’ எனும் புத்தகத்தை வெளியிடுகிறது.

தோ பாயோவில் 1973ஆம் ஆண்டு, அதன் முதல் கடையைத் தொடங்கிய பேரங்காடி தற்போது ஆண்டுக்கு $4.3 பில்லியன் மதிப்பிலான பொருள்களை விற்பனை செய்கிறது.

கட்டுப்படியான விலையில் பொருள்களை விற்பனை செய்யும் பேரங்காடி என்ற நிலையிலிருந்து பணக்கார வாடிக்கையாளர்களுக்கான கடையாக ஃபேர்பிரைஸ் மாறிவருகிறது என்ற குறைகூறல் எழுந்ததைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அது பெரிய அளவிலான கருத்தாய்வை நடத்தியது.

வெவ்வேறு வருவாய்ப் பிரிவுகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்களிடம் கருத்து திரட்டப்பட்டது. அதில், நடுத்தர வருவாய் ஈட்டும் வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் ஈட்டியிருந்த ஃபேர்பிரைஸ் குறைந்த வருவாய் ஈட்டுவோரிடம் அந்த அளவு நற்பெயர் ஈட்டவில்லை எனத் தெரியவந்தது.

தொடக்கத்தில் குடியிருப்புப் பேட்டையினருக்குச் சேவை வழங்குவதில் வேரூன்றியிருந்த பேரங்காடியின் நிலை மாறிவிட்டதாக வாடிக்கையாளர்கள் சிலர் சொன்னதை கருத்தாய்வின் முடிவுகள் உறுதிப்படுத்தின.

நிலைமையைச் சீராக்குவது முக்கியம் என்று கருதியதாக ஃபேர்பிரைஸ் குழுமத் தலைவர் கீ டெக் கூன் கூறினார். இந்தத் தகவல்களை ‘த பிரைஸ் ஆஃப் பீயிங் ஃபேர்’ புத்தகத்தின் ஆசிரியர்களான ‘த நட்கிராஃப்’ நிறுவனத்தின் சூ-ஆன் சியா, பே ஷிங் ஹுவே இருவரிடமும் அவர் பகிர்ந்துகொண்டார்.

பேரங்காடியின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட பல்வேறு தருணங்களை இப்புத்தகம் விவரிக்கிறது.

ஜூலை 22ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் ஃபேர்பிரைஸ் குழுமத்தின் 50ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நடைபெறும். அதில் இப்புத்தகம் பிரதமர் லீ சியன் லூங்கிடம் அதிகாரபூர்வமாக அளிக்கப்படும்.

1973ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ என்டியுசி வெல்கம் பேரங்காடி என்ற பெயரில் தோ பாயோவில் முதல் கடையைத் திறந்துவைத்தார். பின்னர் அது ஃபேர்பிரைஸ் குழுமமாக உருமாறியது.

குறிப்புச் சொற்கள்