தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்வமில்லாமல் வேலை செய்யும்ஊழியர்கள் எண்ணிக்கைசிங்கப்பூரில் அதிகம்

2 mins read
b0f5f81f-375c-4a0a-843b-7bd99d4dcd2b
குறைவான சம்பளம், மேல் நிலைக்குச் செல்ல வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களுக்காக பலர் வேலையில் ஆர்வமில்லாமல் வேலை செய்கின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலையில் ஆர்வமில்லாமல் ஏதோ வந்தோம் செய்தோம் என்று வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை உலக சராசரியைவிட சிங்கப்பூரில் அதிகமாக உள்ளது.

ஆசிரியர் வேலை பார்க்கும் நான்சியும் (புனைபெயர்) அத்தகைய ஊழியர்களில் ஒருவர்.

ஒரே வேலையை செய்தாலும் சக ஊழியருக்கு மட்டும் அதிக சம்பளம் வழங்கப்படுவதை அறிந்த நான்சி மனதளவில் பாதிக்கப்பட்டு வேலை மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.

இருபது வயதுகளில் உள்ள அந்த ஆசிரியர், தனது மாணவர்களுக்கு உற்சாகத்துடன் பாடங்களை எடுக்கும் திட்டங்களையும் கைவிட்டார்.

“என்ன தேவையோ அதை மட்டுமே செய்து வருகிறேன். கேளிக்கைக்கு இடமில்லை. மாணவர்களுடைய வேலைகளுக்கு அர்த்தமுள்ள குறிப்புகளை எழுதுவதில்லை. இதையெல்லாம் எழுதி என்ன பயன் ஏற்படப் போகிறது,” என்று நான்சி கேட்கிறார்.

இது குறித்து அவரது மேலாளரிடம் விசாரித்தபோது, நான்சி பட்டயக் கல்வியை மட்டுமே முடித்துள்ளார், அவரது சகாக்களோ பட்டப்படிப்பை முடித்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் சம்பள உயர்வு பெறுவதற்காக நான்சி இரவுநேர வகுப்புகளுக்குச் சென்று பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

“எனது சம்பளம் அதிகரித்தாலும், நான் கூடுதல் முயற்சிகளை எடுக்க மாட்டேன். நான் வேலை செய்வதற்கான உற்சாகத்தை ஏற்கெனவே இழந்துவிட்டேன். எனது பணிப் பாராட்டப்படவில்லை,” என்கிறார் நான்சி.

வேலையில் இருந்துகொண்டே வேலையைத் துறப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் செய்கின்றனர்.

‘ரேன்ஸ்டாட்’ என்ற நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் சிங்கப்பூரில் 18 முதல் 67 வயது வரையிலான ஆயிரம் பேரில் 35 விழுக்காட்டினர் பற்று இல்லாமல் அமைதியாக வேலை பார்ப்பது தெரிய வந்துள்ளது. இது, உலக சராசரியோடு ஒப்பிடுகையில் நான்கு விழுக்காடு கூடுதலாகும்.

வேலையில் ஆர்வமில்லாத அறிகுறிகளை வெளிப்படுத்தியவர்களில் 41 விழுக்காட்டினர் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்காக அவ்வாறு செய்வதாகக் கூறியுள்ளனர். 38 விழுக்காட்டினர் வேலைக்கு ஏற்ற சம்பளமில்லாதது, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றை காரணங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர். 33 விழுக்காட்டினர் வேலையில் பதவி உயர்வுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

நான்சியைப் போல ஏறக்குறைய 15 ஆண்டு அனுபவமுள்ள சிங்கப்பூரரான பொறியியல் நிபுணர், தனக்கும் வெளிநாட்டு சகாக்களுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு குறித்து அறிந்ததும் வேலையில் இருந்த ஈடுபாட்டை குறைத்துக் கொண்டார்.

தன்னை டேனி என்று குறிப்பிட்ட இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், தன்னுடைய சகாக்களுக்கு சில ஆயிரம் வெள்ளி சம்பளம் அதிகமாக இருப்பதை அறிவதற்கு முன்பு வேலையில் ஆர்வமுடன் இருந்ததாகக் கூறினார்.

தனக்கு சம்பளம் மிகவும் குறைவு என்று எண்ணிய அவருக்கு கோபமும் ஏற்பட்டது. அப்போதுமுதல் சகாக்களைவிட தனது வேலைகளை அவர் குறைத்துக்கொண்டார்.

“வேலையில் இருந்துகொண்டே அமைதியாக வேலையைத் துறப்பது ஒரே இரவில் நடந்துவிடுவதில்லை,” என்று ‘காமிங் ஹார்ட்ஸ்’ ஆலோசகரான கேரலின் ஹோ கூறினார்.

“அது, வழக்கமாக படிப்படியாக இடம்பெறுகிறது. முதலாளிகள் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை தவிர்ப்பதற்கான முயற்சிகளை முதலாளிகள் எடுக்க வேண்டும்,” என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்