சிறப்பாக ஆங்கிலம் பேசுவது மட்டுமே முக்கியமன்று: ஜார்ஜ் கோ

1 mins read
af7e7868-b812-44e0-a7a6-556bb2c6a851
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 120 இளம் தொழில்முனைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திரு ஜார்ஜ் கோ உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மற்றவர்களுடன் உரையாடுவதற்கும் அவர்கள் நம்மீது நம்பிக்கை கொள்வதற்கும் சிறப்பாக ஆங்கிலம் பேசுவது மட்டுமே முக்கியமன்று என்று எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் திரு ஜார்ஜ் கோ கூறியிருக்கிறார்.

அதற்குப் பதிலாக உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது அதைவிட முக்கியமாக இருக்கலாம் என்று ஒசியா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் குழு நிர்வாகத் தலைவருமான அவர் தெரிவித்தார்.

63 வயது திரு கோ, திங்கட்கிழமையன்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 120 இளம் தொழில்முனைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் திரு கோ, தாம் தொழில்முனைவராக இருக்கும் அனுபவம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

ஹார்வி நோர்மன் நிறுவனத்தின் இணை நிறுவனர் கேரி ஹார்வி போன்ற வெற்றிகரமான தொழிலதிபர்கள் தமது பங்காளிகளானதற்குத் தம்மை வெளிப்படுத்திய விதமும் தமது உண்மையான அணுகுமுறையுமே காரணம் என்றார் திரு கோ.

தொழில்ரீதியாகத் தாம் சாதித்திருப்பதை எடுத்துக்கொண்டால், மற்றவர்களுடன் உரையாடுவதில் தாம் சிரமப்பட்டதில்லை என்பதை உணரலாம் என்று திரு கோ வலியுறுத்திச் சொன்னார்.

இந்நிலையில், திரு கோ எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதிபெறுகிறாரா என்ற முடிவு இன்னும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்