‘ராஃபிள்ஸ் மரினாவில் நீர் விளையாட்டு, மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம்’

‘ராஃபிள்ஸ் மரினாவில் நீர் விளையாட்டு, மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம்’

2 mins read
72f3a9df-7d4c-43a9-86c3-30c1015ebc5c
ஜூலை 6ஆம் தேதி ரஃபிள்ஸ் மரினா கடற்பகுதியில் இறந்துகிடந்த மீன்களை ஊழியர் ஒருவர் அகற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துவாசில் உள்ள ராஃபிள்ஸ் மரினா மன்ற உறுப்பினர்கள் அவ்வட்டாரத்தில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராஃபிள்ஸ் மரினாவுக்கு அருகேயுள்ள நீரில் எண்ணெய்க் கசிவு இருப்பது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்ததற்கு தேசிய சுற்றுப்புற வாரியம் அவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை துவாஸ் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய நீர் ராஃபிள்ஸ் மரினா நீர்ப் பகுதியில் கலந்து மாசடைந்தது.

சுற்றுப்புற விதிமீறல்கள் ஏதாவது நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.

மரினாவுக்கு அருகே கடலை நோக்கிச் செல்லும் துவாஸ் வெஸ்ட்டில் உள்ள கால்வாயில் பழுப்பு நிறத்தில் இருந்த நீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று வாரியம் ஆராய்ந்து வருகிறது.

தீச்சம்பவத்துக்குப் பிறகு ராஃபிள்ஸ் மரினாவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சில மீன்கள் இறந்துகிடந்தன.

எண்ணெய் மற்றும் எண்ணெய்ப் பசை திட்டுகளால் நீர் மாசடைந்து காணப்பட்டது.

கால்வாய் மற்றும் மரினாவில் நீரின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மரினாவில் தங்களுடைய படகுகளை நிறுத்தி வைத்துள்ள படகு உரிமையாளர்கள் இழப்பீடு கோருவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.

ஆறு பேருடன் சேர்ந்து கோரிக்கைகளை ஒருங்கிணைத்து வரும் டேனியல் வோங், 53, தனது 36 அடி நீள படகுக்கு மீண்டும் வண்ணம்பூச 10,000 வெள்ளி செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

“தீச்சம்பவத்துக்குப் பிறகு மரினாவில் இருந்த அனைத்து உயிரினங்களும் இறந்துவிட்டன. இருபதுக்கும் மேற்பட்ட இறந்த மீன்களை வெளியே எடுத்தோம்,” என்று டேனியல் வோங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்