பீச் ரோட்டில் பேனாக் கத்தியைப் பயன்படுத்தி முன்பின் அறிமுகமில்லாத 32 வயது ஆடவர் ஒருவரின்மீது வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய 52 வயது ஆடவருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2022ல் செப்டம்ர் 18ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு, மற்றோர் ஆடவருடன் டாக்சி நிறுத்தத்திற்கு நடந்துகொண்டிருந்த அந்த இளைய ஆடவரை, சியா சியூ பூன் காரணமின்றி இழிசெற்களால் திட்டத் தொடங்கினார்.
“உன் பிரச்சினை என்ன?” என்று சியாவிடம் பதிலுக்கு உரத்த குரலில் வினவிய அந்த 32 ஆடவர், பின் அவரை மேலும் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றார்.
அப்போது சியா திடீெரன்று அந்த இளையரைப் பேனாக் கத்தியால் தாக்கி அவரைக் கீழே விழும்படிச் செய்தார். அப்போது, உடன் இருந்த 35 வயது ஆடவர் உதவிக்காக ஓலமிட, தற்செயலாக அருகில் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தப்பியோட முயன்ற சியாவை அதிகாரிகள் டாக்சி ஒன்றுக்குள் மடக்கிப் பிடித்தனர்.
தாக்கப்பட்டவரின் மார்பு, அடிவயிறு, பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
மதுபோதையில் இதனைச் செய்த சியா, இதுபோன்ற குற்றங்களுக்காகப் பத்தாவது முறையாக நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.