இவ்வாண்டு ‘கெட் ஆக்டிவ்! சிங்கப்பூர் ஹார்ட்லேண்ட் செலிபிரேஷன்’ என்ற தலைப்பில் குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெறும் தேசிய நாள் கொண்டாட்டம் தீவு முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும் மக்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தவும் ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பு இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
உட்லண்ட்ஸ், ஜூரோங் வெஸ்ட், தோ பாயோ, பிடோக் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு மையங்களில் அடுத்த மாதம் 5, 6ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெறும்.
மக்களைக் கவரும் வண்ணம் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை நடவடிக்கைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் இந்த விழா ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று மட்டும் நடைபெறும்.
காற்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும் எல்லா வயதினரும் கலந்துகொள்ளலாம்.
ஐந்து இடங்களிலும் தங்களின் குடும்பத்தோடு ‘ஸ்போர்ட் டிரை அவுட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இவ்விளையாட்டுகளை பயிற்சியாளர்களிடம் முறையாக கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை ‘ஹார்ட்லேண்ட் செலிபிரேஷன்’ விழாக்குழுத் தலைவர் கர்னல் டெங் ஷின் ஃபோங் கூறினார்.
“கம்போங் விளையாட்டுகள் உட்பட பல நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு சமூகமாக ஒன்றிணைவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் கர்னல் டெங்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விழாவில் எல்லாரையும் உற்சாகப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மூன்று ஆண்டுகளாக ‘டீம் நிலா’வில் தொண்டூழியராக இருக்கும் திரு பக்தவச்சலம் நரேந்திரகுமார் தமிழ் முரசிடம் கூறினார்.
“சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு விழாவில் இடம்பெற்றுள்ளன.
“இந்தக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க வண்ணமயமான மேடை நிகழ்ச்சிகள், குடும்பத்தோடு சேர்ந்து செய்யும் நடவடிக்கைகள், வில் அம்பு விளையாட்டு, சறுக்குப்பலகை, நர்ஃப் போன்ற புதுமையான விளையாட்டுகளை மக்கள் எதிர்பார்க்கலாம்,” என்று உற்சாகத்துடன் கூறினார் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த திரு நரேன், 36.
தேசிய நாளன்று இந்த ஐந்து குடியிருப்புப் பேட்டைகளிலும் இரவு 8.15லிருந்து 8.25 மணியளவில் வாணவேடிக்கைகளைக் காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘குடியிருப்புப் பேட்டைகளில் நடைபெறும் தேசிய நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இலவச நுழைவுசீட்டுகளுக்கு மக்கள் பதிவுசெய்யலாம்.
மேல் விவரங்களுக்கு www.ndp.gov.sg இணையத்தளத்தை நாடலாம்.