தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் வெஸ்ட் வேலை இடத்தில் ஊழியர் மரணம்; பின்னோக்கி வந்த வாகனம் மோதியது

2 mins read
ae776c93-3508-43b4-8973-78fe94fe539d
சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் வேலையிட விபத்துகளால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை கூடியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் வெஸ்ட்டில் வேலை இடம் ஒன்றில் பின்னோக்கி வந்த வாகனத்தில் அடிபட்டு 33 வயது ஊழியர் மாண்டார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நிகழ்ந்தது.

இந்தியாவைச் சேர்ந்த அந்த ஊழியர், தனது டிப்பர் வாகனத்தில் இருந்த பொருளைக் கீழே இறக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.

அப்போது பின்பக்கமாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டது என்று மனிதவள அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஊழியர்மீது மோதிய வாகனம், கட்டுமான இடங்களில் கனமான பொருள்களைத் தூக்கி, இறக்க பயன்படுத்தப்படும் வாகனம் ஆகும்.

மாண்டுவிட்ட ஊழியர், ‘பிஎஸ்என் டெக் எஞ்ஜினியரிங்’ என்ற நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

அவர், ஸ்டார் ரெடி-மிக்ஸ் என்ற நிறுவனத்தின் வேலை இடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அந்தச் சம்பவம், எண் 1 பூரோ குளோஸ் முகவரியில் உள்ள இடத்தில் பிற்பகல் சுமார் 3.40 மணிக்கு நிகழ்ந்ததாகத் தெரிவித்த அமைச்சு, சம்பவம் பற்றி தான் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் அனைத்து வாகன நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்திற்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

வேலை இடங்களில் வாகனங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் முறையான வாகன இயக்க நிர்வாக ஏற்பாட்டை முதலாளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பொதுவான பாதுகாப்பு நடைமுறை என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.

சிங்கப்பூரில் ஜூன் 21ஆம் தேதி நிலவரப்படி, 14 வேலை இட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டில் வேலை இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 66 பேர் பலியாயினர். அதற்குப் பிறகு சென்ற ஆண்டில்தான் ஆக அதிகமாக 46 பேர் மாண்டனர்.

வேலை இடங்களில் நிகழும் விபத்து மரணங்கள் கவலை தரும் அளவுக்கு அதிகரித்ததை அடுத்து, சென்ற ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை, ஆறு மாத கால அதிக பாதுகாப்பு விழிப்பு நிலையை அமைச்சு நடைமுறைப்படுத்தியது.

அதை, மேலும் பல கூடுதல் நடவடிக்கைகளுடன் மே 31 ஆம் தேதி வரை அமைச்சு நீட்டித்தது.

வேலையிட பாதுகாப்பு, சுகாதார விதிகளை மீறுவோருக்குத் தண்டனையையும் அமைச்சு அதிகப்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்