இவ்வாண்டு தொடக்கநிலை 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் முதல் கட்டம் ஜூலை 5ஆம் தேதி நிறைவுபெற்ற நிலையில், ஐந்து தொடக்கப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பாதி இடங்கள் நிரம்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சுவா சூ காங் தொடக்கப்பள்ளி, ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளி, கொங்ஷாங் தொடக்கப்பள்ளி, ரோசைத் பள்ளி, தாவ் நான் பள்ளி ஆகிய பள்ளிகளே அவை.
இந்த முதல் கட்டச் சேர்க்கையானது ஏற்கெனவே பள்ளியில் பயிலும் மூத்த சகோதர, சகோதரிகளைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கானது. அது ஜூலை 4, 5ஆம் தேதிகளன்று நடைபெற்றது.
பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது, செங்காங்கில் உள்ள ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளி. அதன் மொத்த இடங்களில் 54 விழுக்காடு நிரம்பிவிட்டது. 2A கட்டத்திற்கு இன்னும் 50 இடங்கள் எஞ்சியுள்ளன.
2A கட்டம், இதற்கு முன்னர் பள்ளியில் பயின்ற பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கானது. பள்ளியில் ஆலோசனை அல்லது நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கும் பெற்றோரைக் கொண்டுள்ள பிள்ளைகளுக்கும் அது பொருந்தும்.
தேர்ந்தெடுத்த தொடக்கப் பள்ளியின்கீழ் வரும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்தக் கட்டத்தின்கீழ் பதிவுசெய்யலாம்.
அனைத்து 181 தொடக்கப் பள்ளிகளுக்கும், 2A கட்டத்திற்கு எஞ்சியுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தில் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அந்த எண்ணிக்கையில் 2B, 2C கட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்கள் சேர்க்கப்படவில்லை.
மரின் பரேட் பகுதியில் அமைந்துள்ள தாவ் நான் பள்ளியில் 2A கட்டத்திற்கு மொத்தமுள்ள 360 இடங்களில் 117 இடங்கள் எஞ்சியுள்ளன. சிராங்கூனில் உள்ள ரோசைத் பள்ளியில் 270 இடங்களில் 75 இடங்கள் எஞ்சியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
2A கட்ட மாணவர் சேர்க்கை புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவுபெறும்.