தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி: 360 சந்தேக நபர்களிடம் காவல்துறை விசாரணை

2 mins read
83988802-c94d-44b5-b373-e1e0b688ab58
மாதிரிப்படம்: - பிக்சபே

மோசடியில் ஈடுபட்டவர்கள், மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 360 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த மோசடியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் $7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.

சந்தேக நபர்கள் 1,200க்கும் அதிகமான மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

முதலீடு, மின் வர்த்தகம், கடன்கள், வேலைகள், நண்பர் என்று பொய் சொல்லி கைப்பேசி மூலம் தொடர்பு கொள்வது, அரசாங்க அதிகாரியைப் போல பாசாங்கு செய்வது, இணையம் மூலம் காதல் உள்ளிட்ட மோசடிகளில் சந்தேக நபர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவையை வழங்குதல் ஆகியவை தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவையை வழங்குவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $125,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது கைப்பேசி எண்களைப் பயன்படுத்த மற்றவர்கள் அனுமதி கோரும்போது அவர்களது கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று பொதுமக்களிடம் காவல்துறை அறிவுறுத்துகிறது. இல்லாவிட்டால், அவர்களது வங்கிக் கணக்குகள் அல்லது கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குற்றங்கள் குறித்து தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் எண்ணுடன் தொடர்புகொண்டு காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்