பழுதடைந்த 25,000க்கும் மேற்பட்ட ஐஃபோன்களைக் கையாடிய முன்னாள் உதவி செயல் பிரிவு மேலாளருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லிம் ஜென் ஹீ புரிந்த குற்றத்தினால் அவர் முன்பு பணிபுரிந்த பெகட்ரோன் சர்விஸ் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் ($6.7 மில்லியன்) அதிகமான இழப்பு ஏற்பட்டது. கைப்பேசிகளைப் பழுதுபார்க்கும் சேவை வழங்கிய அந்த நிறுவனம் கையாடப்பட்ட கைப்பேசிகளுக்கான தொகையை ஆப்பிள் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டியிருந்தது.
சிங்கப்பூரிலும் ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளிலும் ஐஃபோன் பழுதுபார்ப்பு சேவையை பெகட்ரோன் நிறுவனம் அப்போது வழங்கிக்கொண்டிருந்தது.
மலேசியரான 51 வயது லிம் மீது நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெகட்ரோன் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இங் சு கியான் என்பவருடன் சேர்ந்து லிம் அக்குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெகட்ரோன் நிறுவனத்தின் தளவாட மேலாளராக இங் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார்.
40 வயது இங்கிற்கு 2021ஆம் ஆண்டில் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.