தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதையும் மூடி மறைக்கமாட்டோம்; துணைப் பிரதமர் வோங் திட்டவட்டம்

3 mins read
bc6b33fc-a22e-416c-81a4-3b365299c241
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்த ஒரு விவகாரம் பற்றிய புலன்விசாரணையில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் உதவி வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கமும் சரி, மக்கள் செயல் கட்சியும் சரி எதையும் மூடி மறைக்காது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை தெரிவித்தார்.

வெளியே தெரிய வருபவை சங்கடத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தினாலும்கூட அரசாங்கமும் கட்சியும் எதையும் மூடி மறைக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தொடர்ந்து கட்டிக்காக்க பிரதமர் லீ சியன் லூங்கும் தானும் முற்றிலும் கடப்பாடு கொண்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு புதன்கிழமை காலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அமைப்பு கண்டறிந்த ஒரு விவகாரம் பற்றிய புலன்விசாரணையில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் உதவி வருகிறார் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து துணைப் பிரதமரின் இந்தக் கருத்துகள் வெளியாகி உள்ளன.

“ஊழலுக்கு எதிராக கடுமையான போக்கை அரசாங்கம் கைக்கொள்கிறது. ஊழலை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது. சிங்கப்பூரர்கள் தங்கள் அரசியல் தலைவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உயர்தர நேர்மையைத் தொடர்ந்து கட்டிக்காப்போம்.” என்று திரு வோங் தெரிவித்தார்.

“லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு பிரிவு, முன்னதாக வேறு விவகாரம் ஒன்றைப் பற்றி புலன்விசாரணை நடத்தியது. அது பற்றி மே மாதம் பிரதமரிடம் அந்தப் பிரிவு தெரிவித்தது.

“பிறகு அந்தப் பிரிவு தனது புலன்விசாரணையைத் தொடர்ந்தது. அது பற்றி ஜூலை 5ஆம் தேதி பிரதமரிடம் அது தெரிவித்தது.

“அமைச்சர் ஈஸ்வரனை விசாரிக்க வேண்டும் என்று அது பிரதமரைக் கேட்டது. ஒரே நாளில் பிரதமர் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

“முறையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று அந்தப் பிரிவின் இயக்குநர் தெரிவித்ததை பிரதமர் ஏற்றுக்கொண்டார்,” என்று திரு வோங் விளக்கினார்.

இவை எல்லாம் துணைப் பிரதமர் வோங்கிடம் தெரியப்படுத்தப்பட்டது. புலன்விசாரணை ஜூலை 11 ஆம் தேதி தொடங்கியது.

இந்த விவகாரத்தில் சிங்கப்பூரர்கள் அக்கறைகொண்டு இருப்பது தனக்குத் தெரியும் என்ற திரு வோங், இருந்தாலும் மேற்கொண்டும் எதையும் தன்னால் தெரிவிக்க இயலாது என்றார்.

“இந்த நிலையில், பொதுமக்கள் ஊகமாக எதையாவது தெரிவிக்காமல் இருந்துவரவேண்டும். ஊழல் ஒழிப்புப் பிரிவு தனது விசாரணை முடிந்ததும் தான் கண்டு பிடித்தவற்றை உரிய நேரத்தில் வெளியிடும்.

“இந்த விவகாரம் தொடர்பில் இந்தப் பிரிவு முழுமையான, சுதந்திரமான புலன்விசாரணயை நடத்தும் என்பதை ஒவ்வாருவருக்கும் உறுதிபட கூறுகிறேன்,” என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.

புலன்விசாரணை முடியும்வரை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புகளைக் கைவிட்டு விடுமுறையில் இருக்கும்படி திரு ஈஸ்வரனை பிரதமர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அவர் விடுப்பில் இருக்கையில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இடைக்காலப் போக்குவரத்து அமைச்சராக இருப்பார்.

சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ரிடவுட் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து இருந்த விவகாரம் பற்றி அண்மையில் ஊழல் ஒழிப்புப் புலன்விசாரணைப் பிரிவு புலன்விசாரணை நடத்தி அந்த இரண்டு அமைச்சர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்தது.

அந்தப் புலன்விசாரணைக்கும் இப்போதைய புலன்விசாரணைக்கும் உள்ள வேறுபாடு பற்றி கேட்டபோது இரண்டும் வேறுபட்டவை என்று திரு வோங் குறிப்பிட்டார்.

“ரிடவுட் விவகாரத்தைப் பொறுத்தவரை அந்த இரண்டு அமைச்சர்கள் பற்றியும் இணையத்தில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

“அந்த விவகாரம் பற்றி தன்னிச்சையாகப் புலன்விசாரணை நடக்க வேண்டும் என்று விரும்பி, அத்தகைய விசாரணையை நடத்தும்படி அந்த இரண்டு அமைச்சர்களும் பிரதமரைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“ஆனால் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே ஊழல் ஒழிப்புப் புலன்விசாரணைப் பிரிவு முயற்சிகளின் பேரில் எல்லாம் நடந்து வருகிறது.

“பொதுமக்கள் புகார் எதுவும் இதில் இல்லை,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் தான் நடத்திய புலன்விசாரணைகளின் அடிப்படையில் அமைச்சர் ஈஸ்வரனிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தப் பிரிவு முடிவு செய்தது.

“முறையான புலன்விசாரணை நடக்க வேண்டும் என்று ஊழல் ஒழிப்புப் புலன்விசாரணைப் பிரிவு கூறியதை பிரதமர் ஒப்புக்கொண்டார். இதன் காரணமாகத்தான் அமைச்சர் ஈஸ்வரனை விடுமுறையில் செல்லும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்,” என்று துணைப் பிரதமர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்