போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டது.
அதேநாளில், ஹோட்டல் தொழிலதிபர் ஓங் பெங் செங்கும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளைத் தொடர்ந்து, சிபிஐபி பேச்சாளர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
முன்னதாக, ஹோட்டல் தொழிலதிபர் ஓங் பெங் செங்கிற்கு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) கைதாணை பிறப்பித்ததாகச் செய்தி வெளியானது.
‘ஹோட்டல் புராப்பர்ட்டிஸ் லிமிடெட் (எச்பிஎல்)’ நிறுவனரும் தலைமை நிர்வாகியாகவும் உள்ள திரு ஓங், 77, போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரனுடன் தாம் கொண்டுள்ள தொடர்புகளைப் பற்றி சிபிஐபியிடம் தெரிவிக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 14) முதல் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவிருந்த திரு ஓங், சிங்கப்பூருக்குத் திரும்பியவுடன் தமது கடப்பிதழை சிபிஐபியிடம் ஒப்படைக்கவிருக்கிறார்.
இதனை ‘எச்பிஎல்’ நிறுவனம் வெள்ளிக்கிழமை ( (ஜூலை 14) காலை 7.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
திரு ஓங் மீது இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவாகவில்லை என்றும் அவருக்கு $100,000 பிணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் கூறியது.
வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு ஈஸ்வரன், விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என்பதை சிபிஐபி புதன்கிழமை அறிவித்ததை அடுத்து திரு ஓங், சிபிஐபி தலைமையகத்திலிருந்து வெளியே வந்ததைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
விசாரணை பற்றிய மேல்விவரங்களை சிபிஐபி இதுவரை வெளியிடவில்லை.
சிபிஐபியுடன் திரு ஓங் ஒத்துழைத்து, வேண்டிய விவரங்களை அளித்துள்ளதாக ‘எச்பிஎல்’ நிறுவனம் கூறியது.
“இது தொடரும் விவகாரம் என்பதால் மேற்கொண்டு தகவல்கள் கூற அவரால் முடியவில்லை. இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டால் நிறுவனத்தின் நிர்வாக அவையிடம் தெரிவிக்கக் கடமைப்பட்டவராவார்,” என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
திரு ஓங், தலைமை நிர்வாகிப் பொறுப்பை வகிக்கத் தகுதியானவர் என்பதை நிறுவனத்தின் நியமனக்குழு முடிவுசெய்திருப்பதை ‘எச்பிஎல்’ குறிப்பிட்டது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் நிறுவனம், திரு ஓங் தலைமைப் பொறுப்புகளில் நீடிப்பதற்குத் தகுதியானவரா என்பதையும் தொடர்ந்து பரிசீலனை செய்யும் என்றது.
இதனிடையே, திரு ஓங்கிற்குக் கைதாணை அறிவிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ‘எச்பிஎல்’ நிறுவனப் பங்குகள் சரிவுகண்டன.