நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து ஒலிவாங்கியில் பதிவான விவகாரம் தொடர்பில் அவைத் தலைவர் இந்திராணி ராஜா ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது விளக்கமளிப்பார்.
“இவ்விவகாரம் நாடாளுமன்ற நடத்தை தொடர்பானது என்பதால், அதுகுறித்து அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுவேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
திரு டான் பேசிய அக்கருத்து பதிவான காணொளி அண்மையில் இணையம் வழியாகப் பரவியது.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அதிபர் உரை குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் கூடிய முதல் நாளன்று திரு டான் முணுமுணுத்தது ஒலிவாங்கியில் பதிவானது.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவது தொடர்பில் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ஜேமஸ் லிம் பேசி முடித்தபின் திரு டான் முணுமுணுத்தார்.
இதனைத் தொடர்ந்து, பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக இணைப் பேராசிரியர் லிம்மிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை திரு டான் தமது ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்திருந்தார்.