தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து வாசிப்புத் திருவிழாவின் ஓர் அங்கமாக வழங்கிய ஒரு கருத்தரங்கம் நமது சமூகத்தின் பச்சாதாப மனப்பாங்கைப் பற்றிக் கருத்துரைத்தது.
2011ல் வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் அறத்தை நிலைநாட்டியதா என்பதை ஆராய்ந்து, அதுபோன்ற கதாபாத்திரங்கள் சிங்கப்பூரில் இப்போதும் வாழ்கிறார்களா என்ற கேள்வி கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு 8 ஜூலை 2023 சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை இடம்பெற்றது.
தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16வது தளத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தை ஆசிரியரும் சிங்கப்பூர் எழுத்தாளருமான திருமதி சித்ரா ரமேஷ் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
கருத்தரங்கப் பேச்சாளர்களாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களான அஸ்வின், ஹரிநேத்ரா ஆகியோருடன், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தைப் பிரதிநிதித்து முனைவர் பாலகிருஷ்ணன் ராமநாதன், திரு. யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துத் திருமதி சித்ரா ரமேஷ் பேசும்போது, அறம் என்கிற மனிதப்பண்பு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறது என்றும், இன்றுவரை இலக்கியங்களிலும், தனிமனித வாழ்க்கையிலும் அறம் போற்றப்படுகிறது என்றும் பல உதாராணங்களுடன் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அறம் சார்ந்த பல இலக்கியங்கள் இருந்தாலும், இன்றையச் சூழலில் எல்லாருக்கும் அறிமுகமான தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை அடிப்படையாகக் கையாளப்படுவது மிகவும் பொருந்துவதாகக் கூறினார்.
பிறருக்குத் துன்பம் தராமல் அவர்களுக்குப் பயன்படும்படியாக சொந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே, அறத்தின் அடிப்படை இலக்கு என்றாலும் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கண்டு பச்சாதாப மனப்போக்குடன் அவர்களுக்கு உதவிசெய்ய முன்வருதலே அறவழி வாழ்வின் முக்கிய அங்கம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அறத்தோடு வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமும் வாழ்க்கையில் இல்லை. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே வாழமுடியும் என்பதைத் திரு ஜெயமோகனின் கதாபாத்திரங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தினார்,” என்று அவர் கூறினார்.
மாணவர் அஸ்வின் பேசியபோது, ஜெயமோகனின் ‘அறம்’ மற்றும் ‘சோற்றுக்கணக்கு’ சிறுகதைகளைப் பற்றித் தன் கருத்துகளை விரிவாகப் பேசிப் பகிர்ந்துகொண்டார். சோற்றுக்கணக்கு கதையில் வரும் கெத்தேல் சாகிப் எல்லாருக்கும் உணவளித்துப் பசியைப் போக்கினாலும் அநியாயம் ஒன்று நடக்கும்போது அவர் கொதித்தெழுந்து அதைத் தடுக்கத் தவறவில்லை என்றார்.
மாணவி ஹரிநேத்ரா பேசும்போதும் ‘அறம்’ மற்றும் ‘யானை டாக்டர்’ கதைகளைப் பற்றி தனது கருத்துகளை இலக்கிய வரிகளோடு ஒப்பிட்டுப் பகிர்ந்துகொண்டார். அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சுவது, மிருகங்களைத் தொல்லைப்படுத்துவது போன்ற செயல்கள் மனிதனின் வக்ரபுத்தியிலிருந்து உதிப்பவை எனக் கூறினார்.
அதன் பிறகு பேசிய முனைவர் பாலகிருஷ்ணன் ராமநாதன் சிங்கப்பூரில் உள்ள சமுதாய நிலவரம் அறத்தின்படி இருப்பதற்கு சிங்கப்பூரின் நேர்மையான சட்டங்கள், சமூக நிறுவனங்களில் மூலம் தொடரும் தொண்டூழிய வழமை போன்றவை சான்றுகளாக விளங்குவதாகச் சொன்னார்.
இறுதியாகப் பேசிய ரஜித், சிலர் கைவிடப்பட்ட பூனைகளுக்கு உணவு அளிப்பதையும், சிலர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாகவே தொடர்ந்து உணவு வழங்குவதையும் குறிப்பிட்டார்.
அறத்துடன் ஒருவர் வாழ்கிறாரா என்று பரிசீலிப்பதற்கு நடுநிலைமை தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சி ஏறக்குறைய 90 நிமிடங்களுக்கும் மேலாக நடந்தது. கருத்தாய்வில் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தது, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பைக் கொடுத்தது.
தகவல்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்.

