சாங்கி ஈஸ்ட் கட்டுமானத் திட்ட வேலை இடத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 30 வயது ஊழியர் மாண்டார்.
அந்தக் கட்டுமானத் திட்டத்தின்கீழ், விமான நிலைய ஐந்தாம் முனையமும் புதிய ஓடுபாதையும் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த விபத்து, சாங்கி கோஸ்ட் ரோட்டில் வியாழக்கிழமை பிற்பகல் 4.45 மணியளவில் நிகழ்ந்தது என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
கட்டுமானச் சாதனங்களை அகற்றவும் தூக்கவும் பயன்படுத்தப்படும் வாகனத்தை அந்த ஊழியர் இயக்கிக்கொண்டு இருந்தபோது, வாகன அறைக்குள் உடைந்திருந்த ஒரு பகுதி அவர்மீது இடித்துவிட்டது.
அவர் இறந்துவிட்டதாக அந்த இடத்திலேயே அறிவிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் பற்றி அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருகிறது.
வேலை இடத்தில் இயந்திர வேலை அனைத்தையும் நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட தரப்புக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அந்தப் பேச்சாளர் மேலும் கூறினார்.
அமைச்சு உத்தரவிட்ட நிறுவனத்திற்கு ஹோக் லியான் செங் இன்ஃபிராஸ்டெச்சர் CES_SDC JV என்று பெயர் எனவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனிடையே, இதன் தொடர்பில் கருத்து கூறிய சாங்கி விமான நிலையக் குழுமத்தின் பேச்சாளர், மாண்டுவிட்ட ஊழியரின் குடும்பத்திற்கு உதவி செய்வதன் தொடர்பில் அந்த ஊழியரின் முதலாளி நிறுவனத்துடன் சேர்ந்து இக்குழுமம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சாங்கி ஈஸ்ட் கட்டுமானத் திட்டத்தில் இதற்குமுன் 2021 நவம்பரில் ஒரு விபத்து நிகழ்ந்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 43 வயது ஊழியர் மாண்டார்.
அந்தத் திட்டம் தொடர்பான முதலாவது வேலையிட மரணம் 2019 பிப்ரவரியில் நிகழ்ந்தது. அப்போது இந்தியாவைச் சேர்ந்த 27 வயது ஊழியர் டிரக் வாகனம் ஒன்றில் அடிபட்டு மரணமடைந்தார்.
ஜூரோங் வெஸ்ட்டில் கட்டுமான இடம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த ஒரு விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியர் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒரே வாரத்திற்குள் இப்போது இரண்டாவது வேலையிட மரண விபத்து நிகழ்ந்து இருக்கிறது.