தகாத உறவு காரணமான பிரச்சினை தொடர்பாக சிங்கப்பூர் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் திங்கட்கிழமை பதவி விலகினார்.
அவருடன் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியும் பதவி விலகினார்.
மரின் பரேட் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டான் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக்கொண்டார்.
இருவரும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் விலகினர்.
இத்தகவலைப் பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமையன்று தெரிவித்தது. இனி திரு டானின் கெம்பாங்கான்-சாய் சீ தொகுதியைக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கவனித்துக்கொள்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை பிரதமர் லீ வெளியிட உள்ளார். அப்போது புதிய சபாநாயகரை நியமனம் செய்வதாகக் கூறினார். அதுவரையில் துணை சபாநாயகர் ஜெசிகா டான் தற்காலிக சபாநாயகராக இருப்பார். மரின் பரேட் குழுத்தொகுதியில் திரு எட்வின் டோங்கும் திரு டான் சி லிங்கும் தலைமை அமைச்சர்களாக பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தகாத உறவு வைத்துக்கொண்டதால் திரு டானும் திருவாட்டி செங்கும் பதவி விலக நேரிட்டது.
பல ஆண்டுகளாக இருந்துவரும் மக்கள் செயல் கட்சியின் நற்பெயரைக் கட்டிக்காக்க அவர்கள் பதவி விலகுவது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
தமது நடத்தை தவறாக இருந்ததை திரு டான் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர் தமது தவற்றை ஒப்புக்கொண்டதைத் தாம் பாராட்டுவதாகப் பிரதமர் லீ கூறினார்.
தமது குடும்ப நிலைமையைச் சரிசெய்ய திரு டான் அரசியலிலிருந்து விலகிக்கொள்ள விரும்பியதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும் திரு லீ சொன்னார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு திரு டானுக்கும் திருவாட்டி செங்குக்கும் இடையிலான தகாத உறவு பற்றி தமக்குத் தெரியவந்ததாக திரு லீ குறிப்பிட்டார். இருவருக்கும் தாம் அறிவுரை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
எனினும் இருவருக்கும் இடையிலான தகாத உறவு தொடர்ந்ததைத் தெளிவாக எடுத்துக்காட்டும் தகவல்கள் தமக்குத் தெரியவந்ததைப் பிரதமர் சுட்டினார்.
பதவி விலகல் அறிவிப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு லீ இந்த விவரங்களை வெளியிட்டார்.
திரு டான், அண்மையில் வேறு ஒரு சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார். நாடாளுமன்ற அமர்வின்போது அவர் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியது ஒலிவாங்கியில் பதிவானது.
அச்சம்பவம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அச்சம்பவம் பதிவான காணொளி சில நாள்களுக்கு முன்பு ரெடிட் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
திரு டான் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் பிரதமர் லீயை சந்தித்தார்.
“நாங்கள் பேசியபோது, நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதற்காகவும் திருவாட்டி செங்குடன் தகாத உறவு வைத்துக்கொண்டதற்காகவும் அவர் உடனடியாக பதவி விலக ஒப்புக்கொண்டார். தகாத உறவைக் கைவிடப்போவதாகக் கூறினார். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை,” என்றார் பிரதமர்.
நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தையைப் பயன்படுத்திய விவகாரத்துக்குத் திரு டான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஏற்கெனவே தமது குடும்பத்தைப் புண்படுத்திய நிலையில் இந்த விவகாரம் அதை மோசமாக்கியதாகவும் அவர் கூறினார்.
“அவர்களை (குடும்பத்தாரை) வருத்தத்துக்கு ஆளாக்கிவிட்டேன். எனது நடத்தையைப் பற்றி முன்பு பேசியிருக்கிறோம். சில அம்சங்களில் நான் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை,” என்றார் திரு டான்.
“அவற்றுக்கு நான் பொறுப்பேற்கவேண்டும், எனது குடும்ப நிலைமையைச் சீர்ப்படுத்த நான் கைகொடுக்க வேண்டும். இதிலிருந்து மீண்டு பிரச்சினைகளைக் கையாள எங்களுக்குத் தனிமை தேவை,” என்று திரு டான் கேட்டுக்கொண்டார்.
திரு டான், திருவாட்டி செங் இருவரும் தங்களின் பதவி விலகல் கடிதங்களில் தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். இருவரும் திங்கட்கிழமையன்று பதவிவிலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.
இந்த விவகாரம், மக்கள் செயல் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அண்மையில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்திலிருந்து மீண்டுவர திரு டானுக்கும் திருவாட்டி செங்கிற்கும் கால, நேர, அவகாசத்தை வழங்கும்படி சிங்கப்பூரர்களை திரு லீ கேட்டுக்கொண்டார்.