பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களான லியோன் பெரேராவும் நிக்கோல் சியாவும் தனிமையில் உணவகத்தில் உணவருந்தும்போது சற்று ‘நெருக்கமாக’ இருப்பதுபோல் தெரியும் காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.
அந்தக் காணொளியை ஆராய்ந்து வருவதாக பாட்டாளிக் கட்சி திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 15 வினாடிகள் நீடிக்கும் அந்தக் காணொளியில் திருவாட்டி நிக்கோல் சியாவைப் போல் இருக்கும் ஒரு பெண்ணின் கையைத் திரு பெரேரா தடவிக்கொடுப்பது தெரிகிறது. இருவரும் உணவகத்தில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். பின்னால் வாகனங்கள் செல்வது தென்பட்டது.
“கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரும் முறையற்ற பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது போன்ற இணையத்தில் பரவலாக வலம் வரும் காணொளி பற்றி கட்சி அறிகிறது.
“கட்சி இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருகிறது. முழுமையான விவரங்கள் கிடைத்ததும் கருத்துத் தெரிவிப்போம். உறுப்பினர்கள் தங்களின் நடத்தைக்கு முழுமையாகப் பொறுப்பேற்பர் என்று கட்சி நம்புகிறது,” என்று பாட்டாளிக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
53 வயது திரு பெரேராவும் 36 வயது திருவாட்டி சியாவும் திருமணமானவர்கள். இருவரும் பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவிலும் இடம்பெற்றுள்ளனர். அக்கட்சியின் மத்திய குழுவில் 15 கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
திரு பெரேரா அல்ஜுனிட் குழுத் தொகுதியில் சிராங்கூன் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும், கட்சியில் ஊடகப் பிரிவின் தலைவர் பொறுப்பிலும் அவர் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டுத் தோற்ற அவர் 2020ஆம் ஆண்டு வரையில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அவர் கேரல் என்ற மாதைத் திருமணம் புரிந்துள்ளார். அத்தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி சியா, பாட்டாளிக் கட்சியின் இளையரணித் தலைவரும் ஆவார்.
முன்னதாக 2012ஆம் ஆண்டில் தகாத உறவு வைத்துக்கொண்டதாகக் கூறப்பட்ட பாட்டாளிக் கட்சியின் யாவ் ஷின் லியோங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் ஹவ்காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
பாட்டாளிக் கட்சி நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு
அந்நிகழ்வைக் கருத்தில்கொள்ளும்போது பாட்டாளிக் கட்சி, திரு பெரேராவைப் பதவி விலகச் சொல்லும் என்று தான் நம்புவதாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் சட்ட இணைப் பேராசிரியர் இயூஜின் டான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
திரு பெரேராவுக்கும் திருவாட்டி சியாவுக்கும் இடையே தகாத உறவு இருந்தால் பாட்டாளிக் கட்சியில் மேலும் எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க இருவரும் பதவி விலகுவதே ஆகச் சிறந்தது என்று அரசியல் கவனிப்பாளரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளருமான டாக்டர் ஃபீலிக்ஸ் டான் சொன்னார்.
தவறான நடத்தை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர்களாக டான் சுவான் ஜின், செங் லி ஹூவி இருவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட மக்கள் செயல் கட்சியின் உறுதியான செயல்பாட்டை மேற்கோள் காட்டிய சோலாரிஸ் ஸ்டார்டஜிஸ் சிங்கப்பூர் அமைப்பின் மூத்த அனைத்துலக விவகார பகுப்பாய்வாளரான டாக்டர் முஸ்தபா இஸுதீன், பாட்டாளிக் கட்சியும் அதே அணுகுமுறையைக் கையாண்டு திரு பெரேரா மீதும் திருவாட்டி சியா மீதும் அதே நடவடிக்கையை எடுக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகக் கூடும் என்றார்.
ஒருவேளை அவ்வாறு நடந்தால் பாட்டாளிக் கட்சிக்கு அது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும். காரணம், திரு பெரேராவும் திருவாட்டி சியாவும் அக்கட்சியின் மத்திய செயல்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
மக்கள் செயல்கட்சி தன் பங்குக்கு நடவடிக்கை எடுத்திருப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கும் மக்கள், அடுத்து பாட்டாளிக் கட்சி என்ன செய்யப் போகிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பார்கள் என்றும் டாக்டர் முஸ்தபா கருத்துரைத்தார்.