மறதிநோயின் ஆரம்பநிலைக்கான மருந்தை அமெரிக்கா இம்மாதம் தொடக்கத்தில் அங்கீகரித்தது.
அதன் பெயர் லெக்கனமேப் (lecanemab). இது, மறதி நோயின் வேகத்தைக் குறைக்கிறது.
இதற்கு அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியிருப்பதற்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்தாலும் சிலர் கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
லெக்கனமேப், மறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் நோயின் தாக்கத்தை மெதுவடையச் செய்யும் முதல் மருந்து. நோயாளிகளுக்கு இது மேலும் அதிக சிறந்த ஆண்டுகளை வழங்குகிறது என்று நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மறதிநோயை புதிய மருந்து மெதுவடையச் செய்தாலும் நோயின் பாதிப்பை பாதிகூட குறைக்கவில்லை என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.
பதினெட்டு மாத காலத்தில் மறதி நோயின் 27 விழுக்காடு பாதிப்பை புதிய மருந்து குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்னமும் லெக்கனமேப் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் தங்களுடைய நோயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த விரும்பும் மருத்துவர்கள் நோயாளிகளின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என்று மருந்துகளை அங்கீகரிக்கும் அதிகாரமுள்ள சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.