தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகங்களுக்கு புதிய நடைமுறைகள்

3 mins read
சமூக ஊடகங்களில் இளம் பதின்மவயதினருக்கான விளம்பரங்களில் கடுமையான கட்டுப்பாடு, புகார் மீதான நடவடிக்கை குறித்து பயனாளருக்கு விவரம்
6602f283-f4ca-4176-92a8-9543970c771b
18 வயதுக்குட்பட்ட பயனாளர்களின் கணக்குகளில் விளம்பரங்கள் கூடாது. தளங்கள் ஆண்டுதோறும் இணையப் பாதுகாப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். - படம்: ஏஎஃப்பி

புதிய நடைமுறை விதித்தொகுப்பின்படி, சமூக ஊடகத் தளங்கள் இணையத் தீங்கு குறித்த புகார் மீதான நடவடிக்கைகளைப் பயனாளர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

புகார் செய்தபிறகு அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை என்ற பயனாளர்களின் கருத்தின் விளைவாக இப்புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

இளம் பயனாளர்களின் மனநலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விளம்பரங்கள் அவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள் தங்களது இணையப் பாதுகாப்பு அறிக்கைகளை ஆண்டுதோறும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஎம்டிஏ) இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆணையம் திங்கட்கிழமை அறிவித்த இணையப் பாதுகாப்பு நடைமுறை விதித்தொகுப்பின்கீழ் வரும் சில புதிய விதிகள் அவை.

புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை நடப்புக்கு வரும்.

ஃபேஸ்புக், ஹார்டுவேர்ஜோன், டுவிட்டர், டிக்டாக், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகியவை நடைமுறை விதிமுறையில் பெயரிடப்பட்ட சமூக ஊடகச் சேவைகள் என்று ஐஎம்டிஏ கூறியது.

இணையப் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தளங்களுக்கான சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையப் பாதுகாப்பு (இதர திருத்தங்கள்) சட்ட விதிமுறைகளைத் தொடர்ந்து பிரபலமான சமூக ஊடகங்கள் சிங்கப்பூரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த நடைமுறை விதித்தொகுப்பு வழிகாட்டுகிறது.

பாலியல், வன்முறை உள்ளடக்கங்கள், இணைய மிரட்டல், பாலியல் தொழில், திட்டமிட்ட குற்றங்கள், தற்கொலை அல்லது சுயதீங்கு, இன அல்லது சமயப் பதற்றத்தைத் தூண்டக்கூடியவை அல்லது பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்துபவை போன்ற தீங்கு ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கங்களை அகற்ற சமூக ஊடகத் தளங்களை வழிநடத்தும் அதிகாரத்தை புதிய சட்டம் அதிகாரிகளுக்கு வழங்குகிறது.

விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்களின் சமூக ஊடகச் சேவைகள் இங்கு முடக்கப்படலாம்.

புதிய விதிமுறைகளின்படி, எத்தகைய உள்ளடக்கம் அனுமதிக்கப்படும், எவை அனுமதிக்கப்படாது என்பது குறித்த சுயவழிகாட்டுதல்களை ஒவ்வொரு தளமும் ஏற்படுத்த வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், தேவையற்ற தொடர்புகளை அகற்றுவதற்கான தேர்வு, இருப்பிடப் பகிர்வு மற்றும் பிற பயனாளர்களுக்கு சுய கணக்கு விவரங்களைக் கட்டுப்படுத்தும் சொந்தப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கான வசதி போன்றவற்றை சமூக ஊடகங்கள் பயனாளர்களுக்கு வழங்க வேண்டும்.

இளம் பயனாளர்களுக்கென, அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய இணையப் பாதுகாப்புத் தகவல்களுடன் தனியான சமூக வழிகாட்டுதல்களை தளங்கள் வழங்க வேண்டும். அத்துடன் உள்ளடக்க நிர்வாகமும் இருக்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் அல்லது அவர்களது பெற்றோர் இந்த இணையச் சேவைகளில் தங்கள் பாதுகாப்பை நிர்வகிக்க அனுமதிக்கும் வசதியும் தீங்கிழைக்கும் உள்ளடக்கம், தேவையற்ற தொடர்புகளைப் பற்றி பயனாளர்கள் புகாரளிப்பதற்கான வழிமுறைகளும் இத்தளங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், பெற்றோரும் பாதுகாவலர்களும் தங்களின் குழந்தைகள் பார்க்கக்கூடிய உள்ளடக்கம், அவர்களது கணக்குகளின் பொது வெளிப்பாடு, அவர்களை யார் தொடர்புகொள்ளலாம் போன்றவற்றை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக, இளம் பயனாளர்களைப் பாதுகாக்க சமூக ஊடகத் தளங்கள் அதிகம் செய்ய வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

“சட்டங்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை, அதை லேசாக எடுத்துக்கொள்ளவோ அல்லது மேலும் பரப்பவோ கூடாது.

“உடனடியாக அந்த சமூக ஊடகத் தளத்திற்குப் புகார் அளிப்பதுடன் மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் அனைவரும் பங்காற்றலாம்,” என்று திங்கட்கிழமை வெளியிட்ட தமது இன்ஸ்டகிராம் பதிவில் திருவாட்டி டியோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்