ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு; எட்டுப் பேர் புதியவர்கள்

ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு; எட்டுப் பேர் புதியவர்கள்

3 mins read
858e3d2f-fbf1-4005-9ee2-fcdf2a6e2aa2
நியமன நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றிருக்கும் திருவாட்டி சந்திரதாஸ் உஷா ராணி. - படம்: சந்திரதாஸ் உஷா ராணி
multi-img1 of 3

கலை இதழின் இணை நிறுவனர், மனநல மருத்துவர் என எட்டுப் புதியவர்களுடன் ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்பட்டியலை நாடாளுமன்றம் திங்கட்கிழமை (ஜூலை 17) வெளியிட்டது.

புதிய உறுப்பினர்களுள் ‘புளூரல்’ கலை இதழின் இணை நிறுவனரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நன்யாங் வணிகப் பள்ளியின் பாட ஒருங்கிணைப்பாளருமான சந்திரதாஸ் உஷா ராணியும் ஒருவர். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முரசு நாளிதழின் முன்னாள் தலைவருமாகிய எஸ் சந்திர தாஸின் மகள் ஆவார்.

2002ஆம் ஆண்டு சட்டத் துறையில் பட்டப்படிப்பும் 2009ஆம் ஆண்டு நிபுணத்துவ கணக்கியல் துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பும் முடித்த திருவாட்டி உஷா, 12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி வழக்கறிஞராகவும் கணக்காளராகவும் கல்வியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பிறகு கலைத்துறையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழக கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் ஆசிய கலை வரலாற்றுப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் இருந்துவரும் 42 வயதான திருவாட்டி உஷா, “ஒட்டுமொத்த சிங்கப்பூர் கலைத்துறையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் அதன்மூலம் இத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதிலும் கவனம் செலுத்த உள்ளேன்,” என்றார் .

கலைஞர்களுக்கும் கலை நிறுவனங்களுக்கும் தங்களுக்கான உரிமைகள், சட்டதிட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல், கலை வளர்ச்சிக்கான நிதியுதவி, கலை பற்றிய பொதுமக்களுக்கான அடிப்படைக் கல்வி, கலைத்துறைப் பணியாளர்களின் நிலைத்தன்மை ஆகியவற்றில் தம்முடைய பங்களிப்பு இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் இளையர்கள் இடையே பல்வேறு கலைப் பிரிவுகளை கொண்டுசெல்வது இத்துறை சிங்கப்பூரில் எதிர்காலத்தில் வேரூன்ற பக்கபலமாய் இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவேன் என்றும் திருவாட்டி உஷா கூறினார்.

இவர் ‘புரோ போனோ எஸ்ஜி’ நிறுவனத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொண்டூழியராகவும் இருந்து வருகிறார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக நியமன நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ராஜ் ஜோஷுவா தாமஸ், 43, தற்போது சிங்கப்பூர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

‘வீ சிவீ தியோ எல்எல்சி’ நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் இவர், வழக்கறிஞர் சங்கத்தின் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின்கீழ் தொண்டூழிய வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

“இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கூடுதல் பொறுப்பை அளித்திருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் பணிகளில் உள்ளோருக்கான ஊதிய உயர்வு, சலுகைகள் போன்றவற்றிற்காகக் குரல் கொடுப்பேன். இந்த தொழில்களுக்கும் தொழில்புரிவோருக்கும் மக்கள் மத்தியில் மதிப்பை உயர்த்துவேன்,“ என்றார் திரு ராஜ்.

‘ஏபிஆர் ஹோல்டிங்ஸ்’ நிர்வாகத் தலைவர் கீத் சுவா தியாங் சூன், ‘சிங் லுன் ஹோல்டிங்ஸ்’ தலைமை நிர்வாகி மார்க் லீ கீன் ஃபை, ‘டாய்ச்சா’ வங்கி உதவித் துணைத் தலைவர் ஏஜி ஓங் ஹுவா ஹான், ‘பெகாசஸ் ஆசியா’ தலைமை நிர்வாகி பரேக் நிமில் ரஜினிகாந்த், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகம் அப்துல் ரஹீம், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தன்னுரிமை, சுயதொழில் பிரிவு இயக்குநர் சீ ஜின்லி, ஸ்டார்ஃபிஷ் மனநலக் கழகத்தின் மனநல மருத்துவர் சையத் ஹருன் தாஹா அல்ஹப்சி ஆகியோரும் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப்பால் நியமிக்கப்படுவார்கள்.

இப்பொறுப்பிற்கு இம்முறை மொத்தம் 30 பேர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தலைமையிலான நாடாளுமன்றத்தின் சிறப்புத் தேர்வுக் குழுவால் இந்த ஒன்பது பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவற்றில் 16 விண்ணப்பங்கள் தனிமனிதர்களாலும் 14 விண்ணப்பங்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த சமூக செயல்பாட்டுக் குழுக்களாலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 2001ஆம் ஆண்டு ஒன்பதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு இதுவரை வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கைகளில் இதுவே ஆகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.