தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதால் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் திங்கட்கிழமையன்று பதவி விலகினார். அவர் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் வெளியேறினார்.
திருவாட்டி செங்கும் பதவி விலகியதோடு கட்சியிலிருந்தும் வெளியேறினார்.
54 வயது திரு டானைப் பற்றிய குறிப்பிடத்தக்க ஐந்து அம்சங்கள்:
பிரிகேடியர் ஜெனரல் டான்
அரசியலில் நுழைவதற்கு முன்பு திரு டான் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவி வகித்தார். 1987ஆம் ஆண்டில் அவர் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்தார்.
அரசியல் களம்
திரு டான் 2011ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையிலிருந்து ஓய்வுபெற்று அரசியல் களத்தில் இறங்கினார். அந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மரின் பரேட் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சிக் குழுவில் இடம்பெற்றார்.
2013ஆம் ஆண்டில் திரு டான் தற்காலிக மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கு மறு ஆண்டு மே மாதம் அவரின் பதவி நிரந்தரமாக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரு டான், சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவைப் பதவிகள்
அதற்குப் பிறகு 2015ஆம் ஆண்டில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரு டான், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2015 பொதுத் தேர்தலுக்குப் பிறகும் அப்பொறுப்பை வகித்தார். 2017ஆம் ஆண்டில் திரு டான் நாடாளுமன்ற நாயகராக நியமிக்கப்பட்டார்.
அந்தப் பொறுப்பை வகித்த திருவாட்டி ஹலிமா யாக்கோப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் லீ சியன் லூங், திரு டானை அப்பொறுப்புக்கு நியமித்தார்.
நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தை
நாடாளுமன்ற அமர்வின்போது திரு டான் தகாத வார்த்தை பயன்படுத்தியது ஒலிவாங்கியில் கேட்டது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று அச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவம் பதிவான காணொளி ரெடிட் சமூக ஊடகத்தில் ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் உரையாற்றிய பிறகு திரு டான் அவரைப் பற்றித் தகாத வார்த்தையில் விமர்சித்தது ஒலிவாங்கியில் கேட்டது.
அதற்காக திரு ஜேமஸ் லிம்மிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மன்னிப்பைத் தாம் ஏற்றுக்கொண்டதாக இணைப் பேராசிரியர் லிம் கூறியிருந்தார்.
மூத்த குடிமக்களைப் பற்றிக் கருத்து; இணையத்தில் எழுந்த சர்ச்சை
2015ஆம் அண்டில் திரு டான், அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் மூத்த குடிமக்களைப் பற்றி வெளியிட்ட கருத்து இணையத்தில் சர்ச்சையை எழுப்பியது. அத்தகைய மூத்த குடிமக்கள் வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைச் சேகரிப்பதை உடற்பயிற்சி நடவடிக்கையாக மேற்கொள்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.
அவரின் அக்கருத்தால் பலர் கோபம் கொண்டனர்.
அதற்குப் பதிலளித்த திரு டான், “பார்ப்பவையெல்லாம் பொதுவாக நடப்பவை என்று நாம் நினைத்துவிடக்கூடாது; எப்போதும் சம்பந்தப்பட்டோருடன் பேசவேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன்.
“உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்கு நாம் நிச்சயமாகக் கைகொடுக்கவேண்டும். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட நம்மால் முடிந்ததைச் செய்வோம்,” என்று கூறினார்.

