செங் லி ஹுவி பற்றி ஐந்து தகவல்கள்

செங் லி ஹுவி பற்றி ஐந்து தகவல்கள்

4 mins read
ab6eb162-b398-47d9-920f-9679d115d92e
திருவாட்டி செங் லி ஹுவி - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னும் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியும் தகாத உறவில் ஈடுபட்டதால் திங்கட்கிழமையன்று பதவி விலகினர்.

மக்கள் செயல் கட்சியிலிருந்து திருவாட்டி செங் விலகியுள்ளார்.

அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து தகவல்களைச் சற்று பார்க்கலாம்.

உயர்நிலைப்பள்ளி மாணவியாக இருந்தபோது அடித்தள அமைப்புப் பணிகளில் தமது தந்தைக்கு உதவியவர்- தாம் உயர்நிலைப்பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது தமது தந்தை அடித்தள அமைப்பில் தொண்டூழியராக இருந்ததாக திருவாட்டி செங் தெரிவித்திருந்தார். அவர் அடித்தள அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அவருடன் தாம் சென்றதாக திருவாட்டி செங் முன்பு கூறியிருந்தார்.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு, பத்தாண்டுகளுக்கு மேலாக வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் உறுப்பினராக திருவாட்டி செங் இருந்தார். அப்போது அடித்தள அமைப்பு நடவடிக்கைகளில் அவருக்கு 12 ஆண்டு அனுபவம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

“சாரணியர் படையில் இருந்ததிலிருந்து 2003ஆம் ஆண்டு முதல் குடியிருப்பாளர் சந்திப்புகளின்போது உதவியது வரை பொதுமக்களுக்கு உதவி செய்வது என் வாழ்க்கையின் முக்கிய பகுதியாகிவிட்டது,” என்று 2015ஆம் ஆண்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திருவாட்டி செங் தெரிவித்தார்.

2015ல் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரானார்

2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தெம்பனிஸ் ஈஸ்ட் வட்டாரத்தில் திருவாட்டி செங் தொண்டூழியம் செய்யத் தொடங்கினார். அதே ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெம்பனிஸ் குழுத் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவராக அவர் நிறுத்தப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மா போ டானுக்குப் பதிலாக அவர் வேட்பாளர் குழுவில் அங்கம் வகித்தார். அமைதியாக இருந்து பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பவர் என்று திருவாட்டி செங்கை திரு மா அப்போது பாராட்டினார்.

இவ்வாண்டு ஜூலை 17ல் திருவாட்டி செங் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, தற்போது அக்குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி, டாக்டர் கோ போ கூன், திரு டெஸ்மண்ட் சூ, திரு பே யாம் கெங் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

2016ல் மக்கள் செயல் கட்சி மகளிர் அணியின் துணை மாவட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்

2016ஆம் ஆண்டில் மக்கள் செயல் கட்சி மகளிர் அணியின் துணை மாவட்ட ஆலோசகராக திருவாட்டி ஷெரல் சான், திருவாட்டி ஜோன் பெரேரா, திருவாட்டி ரஹாயு மஹ்சாம், திருவாட்டி சுன் ஷுவேலிங் ஆகியோருடன் திருவாட்டி செங் நியமிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டிலிருந்து பெண்களின் கருவை உறைய வைப்பது குறித்து திருவாட்டி செங் பேசினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் மகளிர் மேம்பாடு குறித்த வெள்ளை அறிக்கை விவாதத்தின்போது கருவை உறைய வைக்க முடிவெடுக்கும் பெண்களின் உச்சவரம்பு வயதை 35 வயதிலிருந்து 40 வயதுக்கு உயர்த்த வேண்டும் என திருவாட்டி செங் நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

புதிய குடியிருப்புப் பேட்டைகளில் குழந்தை, சிறார் பராமரிப்பு வசதிகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.

கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகளுக்குக் கூடுதல் உதவி வழங்கப்பட வேண்டும் என்று அவர் குரல் கொடுத்தார்.

சிங்கப்பூரில் உள்நாட்டு மறுசுழற்சி விகிதம் போன்ற சுற்றுப்புற விவகாரங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

ஷெங் சியோங் பேரங்காடி நிறுவனத்தின் சுயேச்சை இயக்குநராகப் பதவி வகிப்பவர்

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவாட்டி செங், ஷெங் சியோங் பேரங்காடி நிறுவனத்தின் சுயேச்சை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டில் என்டியுசி ஃபுட்ஃபேரின் இயக்குநர் சபையில் அவர் அங்கம் வகித்தார். என்டியுசி ஃபுட்ஃபேர், என்டியுசி ஃபேர்பிரைசுடன் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இணையும் வரை அவர் அந்தப் பதவியை வகித்தார்.

பொறியியல் நிறுவனமான ஹாய் லெக் ஹோல்டிங்சில் பல்வேறு பதவிகளை வகித்தவர்

திருவாட்டி செங்கின் தந்தையான செங் பக் போ சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹாய் லெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாவார். கடந்த ஆண்டின் நிதி அறிக்கையின்படி அந்த நிறுவனத்தின் 84.83 விழுக்காடு பங்குகள் திரு செங்கிற்கு சொந்தமானவை. கடந்த ஆண்டின் நிதி அறிக்கையின்படி அந்தப் பொறியியல் நிறுவனத்தின் வருமானம் $82.5 மில்லியன்.

திரு செங்கிற்கு ஐந்து பிள்ளைகள். திருவாட்டி செங் அவரது மூன்றாவது பிள்ளையாவார். 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹாய் லெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சபையில் நிர்வாக இயக்குநராக திருவாட்டி செங் நியமிக்கப்பட்டார்.

2012ஆம் ஆண்டில் அவர் அந்நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை திருவாட்டி செங் அப்பதவியில் இருந்தார்.

தமது பெற்றோர், சகோதரர்களைப் போலவே திருவாட்டி செங்கிற்கும் ஹாய் லெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்