போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை காலை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்திற்குச் சென்றார்.
இம்மாதம் 11ஆம் தேதியன்று திரு ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகு முதன்முறையாக ஊடகத்தினர் அவரைக் கண்டனர்.
காலை 10.50 மணிக்கு திரு ஈஸ்வரன் ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தைச் சென்றடைந்தார். சாம்பல் நிற ‘மஸ்டா 6’ வாகனத்தில் அவர் வந்திறங்கினார்.
திரு ஈஸ்வரன் துணை எவருமின்றி லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்குள் நுழைந்தார். அவர் நீல நிற மேற்சட்டையையும் கருநிற கால்சட்டையையும் அணிந்திருந்தார்.
திரு ஈஸ்வரனும் தொழிலதிபர் ஓங் பெங் செங்கும் ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டதாகவும் தாங்கள் கண்டெடுத்த ஒரு விவகாரம் தொடர்பில் நடந்துவரும் விசாரணைக்கு இருவரும் ஒத்துழைப்பதாகவும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது. விவகாரம் குறித்த மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். திரு ஈஸ்வரனின் கடப்பிதழ் மீட்டுக்கொள்ளப்பட்டது.
77 வயதான திரு ஓங், திங்கட்கிழமையன்று தனியார் விமானத்தில் பாலியிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பினார். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அவருக்கு அனுமதி வழங்கியிருந்தது.
திரு ஓங் 100,000 வெள்ளி பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டபின் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாலிக்குப் புறப்பட்டார்.