சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற நாயகரான டான் சுவான் ஜின், சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் இத்தகவலைத் தெரிவித்தது.
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியுடன் திரு டான் தகாத உறவு வைத்துக்கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று திரு டான் தமது நாடாளுமன்ற நாயகர் பொறுப்பிலிருந்தும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் விலகினார். திருவாட்டி செங்கும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டு மக்கள் செயல் கட்சியிலிருந்து வெளியேறினார்.
இப்போது ஒலிம்பிக் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்தும் திரு டான் விலகிக்கொண்டுள்ளார்.
“தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அவரின் எஞ்சிய தவணைக் காலத்திற்கு ஆக மூத்த இணைத் தலைவர் தற்காலிகத் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்,” என்று சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
“திரு டான் சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்துக்குப் பல ஆண்டுகளாக ஆற்றிய சேவைக்கும் பங்கிற்கும் நிர்வாகக் குழு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது,” என்றும் அவர் சொன்னார்.
மன்றத்தின் ஆக மூத்த இணைத் தலைவர் ஜெசி புவா தற்காலிகத் தலைவராகப் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தங்களுக்கிடையிலான தகாத உறவை நிறுத்திக்கொள்ளுமாறு திரு டான், திருவாட்டி செங் இருவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்ட பிறகும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் திங்கட்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர்களிடையே இருந்த தகாத உறவைப் பற்றித் தமக்குத் தெரிய வந்ததாகத் திரு லீ கூறினார். இருவருடனும் தாம் பேசி அறிவுரை வழங்கிய பிறகும் அவர்கள் உறவைத் தொடர்ந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்துக் கடைசியாக 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் அறிவுரை வழங்கியதாகத் திரு லீ சொன்னார்.
54 வயதாகும் திரு டான் திருமணமானவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். 47 வயது திருவாட்டி செங் திருமணமாகாதவர்.
திரு டானும் திருவாட்டி செங்கும் தங்களின் பதவி விலகல் கடிதங்களில் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
திரு டான் அண்மையில் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார். நாடாளுமன்ற அமர்வின்போது பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மை அவர் தகாத வார்த்தையில் விமர்சித்தது ஒலிவாங்கியில் பதிவானது.
அச்சம்பவம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று நிகழ்ந்தது. சம்பவம் பதிவான காணொளி ரெடிட் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

