சிங்கப்பூரில் ‘ஜியோதெர்மல்’ எனப்படும் புவிவெப்ப ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான பகுதியை அடையாளம் கண்டுள்ளதாக உள்ளூர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செம்பவாங் வெந்நீரூற்றுக்கு அருகிலுள்ள பகுதியின் நிலத்தடியில் வெப்பநிலை 60லிருந்து 90 டிகிரி செல்சியசுக்கு இடையே இருப்பது ஆய்வுகள்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வெப்பநிலை, ஒரு முட்டையைப் பாதி வேகவைக்க போதுமானது.
செம்பவாங் வெந்நீரூற்றில் நீரின் வெப்பநிலை 40லிருந்து 70 டிகிரி செல்சியசுக்குள் இருக்கிறது.
இதுபோன்ற வெப்பநிலை, எரிமலை இல்லாத பகுதிகளின் நிலத்தடியில் கிட்டத்தட்ட இதே ஆழத்தில் இருக்கும் பாறைகளின் வெப்பநிலையைவிட அதிகம். ஐரோப்பா, ஸ்கேண்டினேவியா, தென்கொரியா போன்ற வட்டாரங்களுக்கு இது பொருந்தும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் அலெசாண்டிரோ ரொமான்யோலி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட குழுவின் தலைவர்களில் அவரும் ஒருவர்.
செம்பவாங் வெந்நீரூற்றுக்கு அருகே உள்ள பகுதியின் நிலத்தடியில் நான்கிலிருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் வெப்பநிலை 200 டிகிரி செல்சியஸ் வரைக்கும் பதிவாகக்கூடும்; அதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த புவிவெப்ப ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான சூழல் இருப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்ததாக இணைப் பேராசிரியர் ரொமான்யோலி சுட்டினார்.
30லிருந்து 60 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில் நீரிலிருந்து உப்பை அகற்றலாம், மீன் வளர்க்கலாம். 90 டிகிரி செல்சியசுக்கும் மேலான வெப்பநிலை, கட்டடங்களுக்குக் குழாய் வழியாக குளிர்நீரை விநியோகிக்கப் பயன்படும்.
150 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை மின்சாரம், ஹைட்ரஜன் உற்பத்திக்கு உகந்தது.
தொடர்புடைய செய்திகள்
நிலத்தடியில் ஏறக்குறைய 2,900 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் பகுதியில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். அதனைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதுதான் புவிவெப்ப ஆற்றல்.
அட்மிரல்டி லேன் பகுதியில் ஆய்வாளர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 1.1 கிலோமீட்டர் ஆழம் வரை நிலத்தடியில் துளையிட்டு வருகின்றனர். வெவ்வேறு ஆழத்தில் இருக்கும் பாறைகளைச் சேகரித்து அவற்றின் வெப்பநிலையைக் கணக்கிட்டு வருகின்றனர்.
இப்பகுதியும் செம்பவாங் வெந்நீரூற்றும் ‘சிம்பாங் கிரானைட் புளூட்டான்’ என்றழைக்கப்படும் நிலத்தடி அடுக்கில் அமைந்துள்ளன. அவ்வடுக்கில் உள்ள கிரானைட் அதிக வெப்பம் கொண்டது.


