சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் திரு ஜார்ஜ் கோ இளையர்களுக்கு ஊக்கமளிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை முன்னிட்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இதைத் தெரிவித்தார்.
“எனது மொத்த வாழ்க்கையை இளையர்களுக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுவேன். ஒன்று, நான் ஒன்றும் கல்வியாளர் அல்ல; பரவாயில்லை, வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
“இரண்டாவது, எனது குடும்பப் பின்னணி. சிங்கப்பூரில் 80 விழுக்காட்டு மக்கள் சாதாரணமானவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாம் எல்லோரும் சாதாரணமானவர்கள். ஒரு சிலர் உயர்மட்டத்தில் இருப்பவர்களாக அழைக்கப்படுகின்றனர்... அவர்களுடன் போட்டியிடத் தேவையில்லை. அதனால் ‘ஜார்ஜ் கோ ஒரு சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர். அவரால் சாதிக்க முடிந்தால் நம்மாலும் முடியும்’ என்று இளையர்கள் ஊக்கமடையும் அளவிற்கு நான் இருக்கலாம்,” என்றார் திரு கோ.
அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரைப் பற்றியும் திரு கோ பேசினார்.
திரு தர்மன் காலம் முழுவதும் அரசாங்கத் துறையில் சேவையாற்றியிருப்பதாக அவர் சொன்னார். தமக்கு தனியார் துறை, அரசாங்கத் துறை இரண்டிலும் அனுபவம் இருப்பதைத் திரு கோ குறிப்பிட்டார்.
இந்த அம்சம் தமக்குச் சாதகமான ஒன்று என்றார் அவர். திரு கோ, சில ஆண்டுகளுக்கு மொரொக்கோவுக்கான கௌரவ சிங்கப்பூர் தூதராகப் பணியாற்றியவர்.
இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த தமது கருத்துகளை அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பகிர்ந்துகொண்டார்.