தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர் உலகத் தமிழ் ஆராய்ச்சிமாநாட்டில் சிங்கப்பூரில் இருந்து கலந்துகொள்ளும் 75 பேர்

2 mins read
742d1aff-d614-48fe-9291-a19d1417272b
படம் - ஊடகம்

எதிர்வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 75 பேர் பேருந்தில் வியாழக்கிழமை அன்று புறப்பட உள்ளனர்.

11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ டி மாரிமுத்து தலைமையிலான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தனிநாயக அடிகளாரால் 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் சுப. திண்ணப்பன் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இதுவரை, கோலாலம்பூரில் மூன்று முறை, சென்னை, பாரிஸ், இலங்கை, மதுரை, மொரிசியஸ், தஞ்சாவூர், சிகாகோ போன்ற இடங்களில் 10 முறை தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றுள்ளது.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் தினகரன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. அரிகிருஷ்ணன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியன், கவிமாலை காப்பாளர் மா. அன்பழகன் உள்ளிட்டோரின் ஒருங்கிணைப்பில் சிங்கப்பூர் பேராளர் குழு மலேசியா புறப்படுகிறது. மாநாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருசிலர் கட்டுரைப் படைக்கவும் உரையாற்றவும் உள்ளனர். பெரும்பாலான பேராளர்கள் பார்வையாளர்களாகத் தமிழ்ப் பணியாற்ற உள்ளனர்.

மாநாட்டின் இரண்டாம் நாள் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கிறார். மலேசிய இந்திய காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ சரவணன் கலந்துகொள்ளவிருக்கிறார். அத்துடன் 15 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான பேராளர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 2,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பழ கருப்பையா போன்ற பலர் கலந்துகொள்ள உள்ளனர். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் வந்த ஆய்வுக் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மாநாட்டு அரங்குகளில் அமர்வுவாரியாக  வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படவிருக்கின்றன. மாநாட்டில் சிறப்பு மலர் வெளியிடப்படவிருக்கிறது.

75 பேரில் ஒருசிலர் கட்டுரைப் படைக்கவும் உரையாற்றவும் உள்ள நிலையில் இதர பேராளர்கள் மாநாட்டின் அமர்வுகளில் பங்கேற்பாளர்களாகச் செல்வர்.

கட்டுரைகள் பல்வேறு அமர்வுகளில் வாசிக்கப்பட்ட பின் மாலை வேளையில் படைப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் பொதுக்கூட்டமாகக் கூடி கலைநிகழ்ச்சிகளைக் காண்பர் என்றார்.

இதற்கிடையில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் எனும் மற்றொரு அணியினர் தமிழ்நாட்டில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். முனைவர் மு. பொன்னவைக்கோவின் தலைமையில் அந்த அணி இயங்கிவருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்