பாட்டாளிக் கட்சி உறுப்பினர் நிக்கோல் சியா, அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவுடன் தகாத உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகிவிட்டார்.
புதன்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், இருவரும் கட்சியிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்தார்.
திரு பெரேராவும் திருவாட்டி சியாவும் உணவகத்தில் அமர்ந்திருப்பதையும் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் காட்டும் 15 நொடிக் காணொளி திங்கட்கிழமை இணையத்தில் வெளியானது. இவ்விருவரும் பாட்டாளிக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
திருவாட்டி சியாவின் 12 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
1. ஈஸ்ட் கோஸ்ட் பூர்வீகம்
திருவாட்டி சியா சிஹெச்ஐஜே காத்தோங், தஞ்சோங் காத்தோங் உயர்நிலைப் பள்ளி, விக்டோரியா தொடக்கக் கல்லூரி ஆகியவற்றில் படித்தபின், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தொடர்புத்துறை பட்டம் படித்தார்.
அவர் முதன்முதலில் 2011 பொதுத் தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளராக மரீன் பரேட் குழுத்தொகுதியில் போட்டியிட்டார். அவர் 2009ல் சீர்திருத்தக் கட்சியின் இளையர் அணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
2. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின்கீழ் பிரபலமடைந்தார்
கருத்து வேறுபாடுகளால் 2011 பிப்ரவரி மாதம் சீர்திருத்தக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களில் திருவாட்டி சியாவும் ஒருவர். அப்போது அவருக்கு 24 வயது.
2011 பொதுத் தேர்தலில் மரீன் பரேட் குழுத்தொகுதியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வேட்பாளராக அவர் போட்டியிட்டார். அவரே அந்தத் தேர்தலின் ஆக இளைய வேட்பாளர்.
தொடர்புடைய செய்திகள்
அவரது பேச்சுத் திறனும் தோற்றமும் வாக்காளர்களைக் கவர்ந்தன. 2011 ஏப்ரல் மாதம், ஃபேஸ்புக் பக்கம் திறந்து ஆறே நாள்களில், முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவுக்கு அடுத்தபடியாக இணையத்தில் ஆகப் பிரபலமாக இருந்த சிங்கப்பூர் அரசியல்வாதியாகத் திருவாட்டி சியா பெயர்பெற்றார்.
அந்தத் தேர்தலில் அவரது அணி 43.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
3. ‘வாழ்க்கையிலேயே ஆக மோசமான ஆண்டு’
2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, திருவாட்டி சியாவுக்கு மின்னஞ்சலிலும் டுவிட்டரிலும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இணையவாசிகள் அவரது அலுவலக முகவரி, தொடர்பு விவரங்கள், வேலை நேரம் போன்றவற்றை இணையத்தில் வெளியிட்டதால் அவர் பீதியில் இருந்ததாகவும் 2014ல் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
4. கட்சியிலிருந்து விலகல்
திருவாட்டி சியா 2013ல் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியிலிருந்து விடுப்பு எடுத்தார். அடுத்த ஆண்டு தனது விளம்பரத்துறை பணியில் முன்னேற பேங்காக் சென்றார். அதே ஆண்டு பிற்பகுதியில் கட்சியிலிருந்து விலகினார்.
5. காதல் மலர்ந்தது
திருவாட்டி சியாவின் காதல் வாழ்வில் ஒருசில கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, 2015 ஆகஸ்ட் மாதம் பிரையன் எனும் சிங்கப்பூர் பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். ஆஸ்திரேலியாவில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது இருவரும் சந்தித்ததாக ‘ஹெர் வோர்ல்டு’ இதழ் செய்தி வெளியிட்டது.
அவரது இரண்டாவது மகள் 2022 ஏப்ரல் மாதம் பிறந்தார்.
6. அரசியலுக்கு அப்பால்
திருவாட்டி சியா தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியிலிருந்து விலகியபிறகு, ‘1965’ எனும் சிங்கப்பூர் திரைப்படத்தில் நடித்தார்.
அப்படம் 2015ல் வெளியிடப்பட்டது.
7. பாட்டாளிக் கட்சியில்
திருவாட்டி சியா 2015 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளிக் கட்சியின் ஊடகக் குழுவில் தொண்டூழியராகச் சேர்ந்தார்.
தமது இரண்டு வயது மகளுக்காக அரசியலுக்குத் திரும்பி வந்ததாக 2020 பொதுத் தேர்தலுக்குமுன் அவர் கூறினார். அந்தத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரது அணிக்கு 46.59 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.
தேர்தலுக்குப் பிறகு 2020 டிசம்பர் மாதம் பாட்டாளிக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பப்ளிசிஸ் மீடியா எனும் பிரெஞ்ச் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாக லிங்க்டுஇன் பதிவு காட்டுகிறது.