தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் பெரியவர்கள் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் ஒரு புதிய ஏற்பாடு மூலம் பயனடையலாம்.
‘கடந்தகால கற்றல்களுக்கான அங்கீகாரம்’ (RPL) என்று அழைக்கப்படும் அந்தப் புதிய அணுகுமுறை, அவர்களின் முறையான கல்வித் தகுதியையும் சாதாரண நிலை அனுபவ அறிவையும் அங்கீகரிக்கும்.
அதாவது தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் பெரியவர்கள் குறுகிய காலத்தில் பட்டங்களைப் பெறலாம்.
அவர்கள் ஏற்கெனவே பெற்றிருக்கக்கூடிய கல்விச் சான்றிதழ்கள், தொழில்துறை சான்றிதழ்கள் அல்லது வேலை அனுபவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இத்தகைய ஓர் ஏற்பாடு, சிங்கப்பூரின் உயர்கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று, பல்கலைக்கழகத்திற்கு நிகரான அந்தக் கழகத்தின் தலைவர் சுவா கீ சியாங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கல்வி கற்பதற்கான வழக்கமான வழிகளில் செலவிடப்படும் நேரம், செலவு ஆகியவற்றை இந்தப் புதிய ஏற்பாடு குறைக்கும் என்பதை அவர் சுட்டினார்.
இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு தங்களுடைய தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள விரும்புவோர், ஏற்கெனவே தாங்கள் கற்றதை மீண்டும் கற்காமல் புதியவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சாண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடந்த அந்தக் கழகத்தின் கற்றல் மாநாட்டில் உரையாற்றியபோது திரு சுவா குறிப்பிட்டார்.
அந்தக் கழகம் கற்பித்தல், கற்றல் பயிலகம் என்று புதிய ஒரு பயிலகத்தை வியாழக்கிழமை தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
புதிய பயிலகம் இந்தக் கழகத்தின் போட்டி அடிப்படையிலான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்வோருக்கும் உதவும்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வியாழக்கிழமை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய அணுகுமுறை, ஒருவர் முன்பு கற்றதை அங்கீகரிக்கிறது. இது முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் முக்கியமான ஓர் அறிகுறியாக இருக்கிறது என்று அறிக்கையில் அமைச்சர் கூறினார்.

