தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரித்தம் சிங் விவகாரத்தில் சிறப்புரிமைக் குழு கூடியது என்பது பொய்; ஆண்ட்ரு லோ, ஜான்சென்இங்1 பதிவுக்கு திருத்தம் வெளியிட பொஃப்மா உத்தரவு

2 mins read
02d78d05-ad86-44c6-b3fd-75aaaff0c2d5
2021 டிசம்பரில் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்குப் பதிலளித்த ரயிஸா கான் (இடம்), எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங். - படங்கள்: GOV.SG

ரயிஸா கானின் பொய்களை எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் முன்கூட்டியே வெளியிடாததாகக் கூறப்படும் விவகாரத்தில் அது குறித்து ஆராய நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு கூட்டப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது.

இதன் காரணமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட அந்தத் தகவலுக்கு திருத்தம் வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற அவைத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா உத்தரவிட்டுள்ளதாக பொஃப்மா எனும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஆண்ட்ரு லோவின் ஃபேஸ்புக் பதிவில் அவ்வாறு கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டான் சுவான் ஜின்னின் மற்றொரு எம்பியுடனான தகாத உறவு பற்றி தெரிந்திருந்தும் அதை பிரதமர் வெளியிடாதது மற்றும் பதவியில் நீடிக்க அவரை அனுமதித்தது குறித்து ஆராய நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவை கூட்ட வேண்டும் என்று ஃபேஸ்புக் பதிவு வலியுறுத்துகிறது.

ஆனால் திரு டானுக்கும் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய்க்கும் இடையிலான உறவு குறித்து 2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகே தமக்குத் தெரிய வந்ததாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஃபேஸ்புக் பயனீட்டாளரான ஆண்ட்ரு லோவுக்கும் அவரது கருத்தை மறுபதிவு செய்த டிக்டாக் பயனீட்டாளர் ஜான்சென்இங்1 என்பவருக்கும் திருத்தம் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

திரு லோவின் பதிவு பொய்யானது. திருவாட்டி கானின் நடத்தை தொடர்பாகவே நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு கூட்டப் பட்டது. ரஸியா கானின் பொய்களை பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் மறைத்ததற்காக சிறப்புரிமைக் குழு கூட்டப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் ரயிஸா கான் தெரிவித்த பல்வேறு உண்மையற்ற தகவல்களுக்கும் அவ்வாறு தெரிவித்த கருத்துக்கு 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆதாரங்களை அவர் வெளியிட தவறியதற்காகவும் சிறப்புரிமைக் குழு கூட்டப்பட்டது.

அப்போது செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரயிஸா கான் மீது விதிகளை மீறியதற்காக திருவாட்டி இந்திராணி ராஜா புகார் அளித்திருந்தார். அந்தப் புகார், சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்