தொழில்நுட்பக் கல்விக்கழகத்தைச் (ஐடிஇ) சேர்ந்த மேலும் பல மாணவர்கள், பலதுறைத் தொழில் கல்லூரியில் 2027 கல்வி ஆண்டு முதல் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களின் மேல் கல்விக்கான விருப்ப உரிமைகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தொழில்நுட்பக் கல்விக்கழகத்தைச் சேர்ந்த அதிக மாணவர்கள் பலனடையவிருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் கல்விக்கழக தேசிய உயர்நிலை சான்றிதழ் (நைடெக்) படிப்பைத் தொடர்வோருக்கு, அவர்கள் கற்கும் தொழில் படிப்பு தொடர்பான மேல் படிப்பை பலதுறைத் தொழில் கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி கிடைக்கும்.
இதற்கு அவர்கள் சராசரி 3.5 என்ற அல்லது அதற்கு அதிக தரநிலையைப் பெற வேண்டும்.
இந்த விவரங்களைக் கல்வி அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நைடெக் பட்டதாரிகளில் தலைசிறந்த 10 விழுக்காட்டினருக்கு அதாவது ஏறக்குறைய 1,000 பேருக்கு ஆண்டுதோறும் இந்த வாய்ப்பு மூலம் நன்மை கிடைக்கும்.
பலதுறைத் தொழிற்கல்லூரி படிப்பிற்கு நேரடி மாணவர் சேர்ப்பு திட்டத்தின்கீழ் இப்போது ஆண்டுக்கு 900 பட்டதாரிகள் தகுதி பெறுகிறார்கள். இந்த நேரடி மாணவர் சேர்க்கை முறை 2013ல் அறிமுகமானது.
வழக்கநிலை மாணவர்கள் பலதுறைத் தொழில் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக இது நடப்புக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
உயர்நிலைப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் முழு பாட அடிப்படையிலான ஏற்பாடு நடைமுறைக்கு வரும் என்பதால் வழக்கநிலை, விரிவுநிலை இனிமேல் இராது.
ஆகையால், பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரடியாக மாணவர்களைச் சேர்க்கும் இப்போதைய முறையை, 2028 கல்வி ஆண்டு முதல் தொழில்நுட்பக் கல்விக் கழகம் நிறுத்திவிடும்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங் மோ கியோ தலைமையகத்தில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இந்த மாற்றங்கள் பற்றி அறிவித்தார்.
இந்த மாற்றங்கள் காரணமாக தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களுக்குப் பலதுறைத் தொழில் கல்லூரியில் இடம் கிடைப்பது உறுதியாகும்.
இது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலானதாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தப் புதிய ஏற்பாடுகள் தொழில்நுட்பக் கல்விக்கழகம், பலதுறைத் தொழில் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்ப்பு நிபந்தனைகளுக்குரிய பரந்த அளவிலான மாற்றங்களின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பலதுறைத் தொழில் கல்லூரி பட்டயப் படிப்பு ஒருபுறம் இருக்க, நைடெக் பட்டதாரிகளுக்கு வேலை, படிப்பு பட்டயக் கல்வி வழியாகவும் தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு வழியாகவும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகளும் இருக்கின்றன.

