ஒவ்வொரு சிங்கப்பூரரும் பிற இனங்களின் கலாசாரக் கூறுகள் பற்றிய ஆழ்ந்த புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வதோடு அவற்றில் ஆர்வமுடன் பங்கெடுக்கவும் வேண்டும் என்றும் அதுவே சிங்கப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சி என்றும் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.
“இன நல்லிணக்கம் நம் அடித்தளம்; சகிப்புத்தன்மை நம் தேசிய அடையாளங்களில் ஒன்று” என்று சிங்கப்பூரின் சீன, இந்திய, மலாய் ஆகிய மூன்று வர்த்தக, தொழிற்சபைகளும் ஒன்றிணைந்து நடத்திய நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது திரு தர்மன் கூறினார்.
இன நல்லிணக்க நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூரின் நான்கு ஆட்சி மொழிகளிலும் வணக்கம் தெரிவித்து வரவேற்ற திரு தர்மன், நம் இனங்களின் அடிப்படை மரபுகள் மாறாமல் அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்தி உயர்வடைய முனைய வேண்டும் என்றும் சொன்னார்.
“ஓவியம், நடனம், இசை, மொழி உள்ளிட்ட பிற இனங்களைச் சார்ந்த பல்வேறு பாரம்பரியக் கூறுகளை அனைவரும் அக்கறையுடன் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இதன்மூலம் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான வலிமையான வரலாற்றுச் சுவடுகளை உடைய நம் இனங்களின் மரபுடைமைகளை கட்டிக்காக்க முடியும்,” என்றும் திரு தர்மன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் அடையாளத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த அனைத்து இனங்களின் மரபுடைமைகளை நிலைத்தன்மையுடன் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் அவர் கூறினார்.
மேலும், நம் பிள்ளைகளை பிற இனப் பிள்ளைகளுடன் நட்புறவுடன் பழக ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அதுவே சவால்மிக்க வருங்காலத்தை நாம் எதிர்கொள்ளும் நம்பிக்கையை அளிக்கும் என்றும் கூறினார்.
சிங்கப்பூர் பல்வேறு சாராரின் இருப்பால் மட்டும் பல்லினச் சமூகமாக முன்னெடுக்கவில்லை என்றும் வீடு, கல்வி, பணி உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் அடிப்படைகளும் சரியான திட்டமிடல் மூலமாகவும் நேர்த்தியான ஒருங்கிணைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் திரு தர்மன் சொன்னார்.
வணிகரீதியாகவும் அனைத்துலக சந்தையில் சிங்கப்பூர் முன்னேற்றம் அடைய பல இன தொழிற்சபைகள் ஒன்றிணைந்து செயல்படுவது புதிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் திரு தர்மன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க இன நல்லிணக்கத்தை அரவணைப்போம்’ எனும் கருப்பொருளில் சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையர்கள் முதல் தொழில்முனைவர்கள் வரை 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிற அங்கங்களாக நடைபெற்ற சொற்பொழிவு, கலந்துரையாடலில் 1964ஆம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்தின்போது தொழில் சபைகளின் பங்கு, சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.
monolisa@sph.com.sg