பிள்ளைகளால் முதியோருக்கு நிதிக் கொடுமைகள்; பிரச்சினையை அமைச்சு ஆராய்கிறது

பிள்ளைகளால் முதியோருக்கு நிதிக் கொடுமைகள்; பிரச்சினையை அமைச்சு ஆராய்கிறது

2 mins read
2d211fd9-419f-43c6-b0d7-23efb3c4920e
முதியோரின் இணக்கமின்றி அவர்களுடைய பணத்தை அவர்களின் பிள்ளைகள் பெற முயன்றால் அத்தகைய ஒரு செயல் நிதி தொடர்பான கொடுமைகளில் உள்ளடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

சொத்துகளை விற்கும்படி சில முதிய பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் நெருக்கி வருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களுடைய நலனை உத்தேசித்து அவ்வாறு செய்கிறார்கள்.

ஆனால், அத்தகைய மூத்தோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஏற்படக்கூடிய இத்தகைய பாதகங்கள் ஒரு பிரச்சினையாக தலையெடுத்து வருகின்றன என்று சமூகத் தொண்டர்களும் சம்பந்தப்பட்ட இதர பிரமுகர்களும் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை பற்றி மேலும் ஆராயும் நோக்கத்தில் ஏற்புடைய தரப்புகளோடும் தன்னுடைய பங்காளி அமைப்புகளோடும் சேர்ந்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இப்போது செயல்பட்டு வருகிறது.

முதியோரைப் பணம் தொடர்பில் இப்படி கொடுமைப்படுத்துவது சிக்கலான ஒரு விவகாரம். இதை வெவ்வேறான முறைகளில் பொருள்கொள்ள முடியும் என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூவெலிங், ஜூலை 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மாதர் சாசன (குடும்ப வன்செயல், இதர விவகாரங்கள்) (திருத்தம்) மசோதா நிறைவேறியபோது இந்தப் பிரச்சினை பற்றி எடுத்துரைத்தார்.

நிதி தொடர்பில் இடம்பெறக்கூடிய இத்தகைய கொடுமையைக் குடும்ப வன்செயலில் ஒன்றாக வரைமுறைப்படுத்துவதா, வேண்டாமா என்பது பற்றி அமைச்சு பரிசீலித்து இருப்பதாக அவர் தெரிவித்தார். இருந்தாலும் இந்த விவகாரம் சிக்கலான ஒன்று என்பதால் இதன் தொடர்பில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

குடும்ப வன்செயலை சிறந்த முறையில் கையாளுவது எப்படி என்பதற்கான வழிகள் பற்றிய பொதுமக்களுடன் கூடிய கலந்துரையாடலின்போது இந்தப் பிரச்சினையை சிலர் எழுப்பியதாக துணை அமைச்சர் திருவாட்டி சுன் கூறினார்.

ஆகையால், இந்த விவகாரத்தில் ஏற்புடைய தரப்புகளை ஈடுபடுத்தி பலவற்றையும் ஆழமாக ஆராய்ந்து உரிய நேரத்தில் மேலும் தகவல்களை அமைச்சு பகிர்ந்துகொள்ளும் என்றாரவர்.

குறிப்புச் சொற்கள்