சிங்கப்பூரில் முன்பைவிட அதிக முதியோர் தங்கள் வீட்டைப் பணமாக்கி ஓய்வுகால வருவாய்க்கு வழி ஏற்படுத்திக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். தங்கள் மத்திய சேம நிதி இருப்பையும் அதிகப்படுத்திக்கொள்ள அவர்கள் விழைகிறார்கள்.
சென்ற ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 2,860 முதியோர், வீட்டுக் குத்தகைக் காலத்தைப் பணமாக்கும் திட்டம், முதியோர் வீட்டு போனஸ் திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டில் 2,790 ஆக இருந்தது.
இதன்மூலம் அவர்கள் ஏறக்குறைய மொத்தம் $429 மில்லியன் தொகையைப் பெற்று இருக்கிறார்கள். அந்தத் தொகையில் சுமார் $202 மில்லியன் தொகையை ரொக்க போனசாகவும் கையில் பெறும் பணமாகவும் முதியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எஞ்சிய $227 மில்லியன் மசே நிதி ஓய்வுகால கணக்கை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
மத்திய சேம நிதிக் கழகத்தின் ஆகப் புதிய வீட்டு நிதி அறிக்கை மூலம் இந்த விவரங்கள் தெரியவருகின்றன. இந்த அறிக்கை, 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரைப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கிறது.
முதியோர், வீவக வீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி பெறுகின்ற ரொக்கத் தொகையும் சேம நிதி கணக்கில் அவர்கள் போடும் பணத்தின் அளவும் கடந்த சில ஆண்டுகளாக கூடி வருகின்றன.
கடந்த 2020ல் வீவக திட்டங்களைப் பயன்படுத்தி மொத்தம் $325 மில்லியன் தொகையை முதியோர் பெற்றனர். இந்தத் தொகை 2021ல் $382 மில்லியனாக உயர்ந்தது.
வீட்டின் நிகர விற்பனையில் இருந்து கிடைக்கும் தொகையில் ஒரு பகுதி முதியோரின் மசே நிதி லைஃப் என்ற காப்புறுதி திட்டங்களில் பணத்தைப் போட பயன்படுத்தப்படுகிறது என்பதால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தொகை கூடுகிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
முதியோருக்குக் கிடைக்கக்கூடிய காப்புறுதி தொகையில் இடம்பெற்ற சராசரி அதிகரிப்பு $500 ஆக இருந்தது.
வீட்டுக் குத்தகைக் காலத்தைப் பணமாக்கும் திட்டம் 2009ல் தொடங்கப்பட்டது. அதன்படி 65 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள முதியோர், தங்கள் வீட்டின் குத்தகைக் காலத்தின் ஒரு பகுதியை வீவக கழகத்திடம் விற்று பணமாக்கலாம். 15 முதல் 35 ஆண்டு வரைப்பட்ட வீட்டின் குத்தகைக் காலம் எஞ்சி இருக்கும்.
முதியோர் வீட்டு போனஸ் திட்டம் 2013ல் தொடங்கப்பட்டது. இது 55 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ளோருக்கு ரொக்க போனஸ் கொடுக்கிறது.
தங்கள் வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையில் $60,000 பணத்தை மசே நிதி ஓய்வுகால கணக்கில் போட்டு, மசே நிதி லைஃப் திட்டத்தில் சேர்ந்தால் இவர்கள் $30,000 ரொக்க போனஸ் பெறலாம்.
“சொத்து மதிப்பு கூடி இருக்கிறது. ஆனால் கையில் போதிய பணம் இல்லை. இத்தகைய ஒரு சங்கடமான நிலை முதியோரில் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
“இதைச் சமாளிக்க இந்த இரண்டு வீவக திட்டங்களும் உதவி வருகிறது,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நிலச்சொத்துத் துறை பேராசிரியர் சிங் டியென் ஃபூ கூறினார்.
சிங்கப்பூரில் 2022 டிசம்பர் நிலவரப்படி, ஏறக்குறைய 9,700 குடும்பங்கள், வீட்டின் குத்தகைக் காலத்தைப் பணமாக்கும் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன.
அவற்றில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக் குடும்பங்கள் $100,000க்கும் $200,000க்கும் இடைப்பட்ட அளவுக்குப் பணம் பெற்று இருக்கின்றன என்று கடந்த பிப்ரவரியில் வீவக தெரிவித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஏறக்குறைய 1,500 ஆக இருந்து வருவதாக கழகம் தெரிவித்துள்ளது.

