15 நாள் விசா இல்லா சீனப் பயணம் ஜூலை 26 முதல்

15 நாள் விசா இல்லா சீனப் பயணம் ஜூலை 26 முதல்

2 mins read
84280c2f-a582-42c1-860b-639eb6adab73
சிங்கப்பூரர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள விசா தொடர்ந்து செல்லுபடியாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

சிங்கப்பூரர்கள் 15 நாள் விசா இல்லாமல் சீனாவுக்குச் செல்லும் நடைமுறையை சீன அரசாங்கம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமல்படுத்துகிறது.

சுற்றுலா மேற்கொள்ள, இடைவழிப் பயணமாக, உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்க அந்த நட்டுக்குச் செல்ல விரும்புவோர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் செயல்படும் சீனத் தூதரகம் ஞாயிற்றுக்கிழம இந்த விவரங்களைத் தெரிவித்தது.

சிங்கப்பூரர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டு இருக்கும் விசா இன்னமும் செல்லுபடியாகும். ஏற்கனவே தாக்கலாகி இருக்கும் விசா விண்ணப்பங்கள் வழக்கம்போல் பரிசீலிக்கப்படும் என்றும் அந்தத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீன அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வரவேற்றது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் மக்களும் தொழில்துறையினரும் அதிகம் சென்றுவர இந்த ஏற்பாடு உதவும். இதன்வழி இருதரப்பு உறவும் மேம்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று தொடங்கியதை அடுத்து வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை சீன அரசாங்கம் 2020 மார்ச்சில் நிறுத்தியது. சிங்கப்பூரர்களுக்கான 15 நாள் விசா இல்லாத பயண ஏற்பாடும் அப்போது ரத்தானது.

பிறகு சீன அரசாங்கம் 2023 மார்ச் மாதம் ஓர் அறிவிப்பை விடுத்தது. வெளிநாட்டினருக்கு அனைத்துவகை விசாக்களும் வழங்கும் ஏற்பாடு தொடங்கும் என்று அது தெரிவித்தது.

இருந்தாலும் 15 நாள் விசா இல்லாத பயணம் நிறுத்திவைக்கப்படுவதாக அப்போது சீன அரசு அறிவித்தது.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த மே மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு சென்றிருந்தபோது, விசா இல்லாத பயண ஏற்பாட்டை சீனா தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

குறிப்புச் சொற்கள்