நல்லிணக்கமே அடித்தளம்: இங் கோக் சொங்

நல்லிணக்கமே அடித்தளம்: இங் கோக் சொங்

2 mins read
215bc2d1-dceb-42e9-9410-6fab60abc7ec
டவுனர் சாலையில் உள்ள சீக்கியக் கோயிலில் வழிபாடு செய்த திரு இங் கோக் சொங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் தாம் அதிக கவனம் செலுத்தவிருப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள 75 வயது திரு இங் கோக் சொங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் சமூக நிலைத்தன்மைக்கு அடித்தளமாக இருப்பது இன நல்லிணக்கம். அது பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமூகமே நிலைகுலைந்துவிடும் என்றார் அவர்.

பூன் கெங் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மத்திய சீக்கிய கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகைபுரிந்த திரு இங், சிங்கப்பூரின் பொருளியல் வளங்களைக் காட்டிலும் முக்கியமானதும் பாதுகாக்கப்படவேண்டியதும் மக்களிடையே உள்ள இன நல்லிணக்கம் என்றார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் இவர் பங்கேற்ற முதல் சமூக பொது நிகழ்வு இது. 

அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’இன் முன்னாள் தலைவரான திரு இங், அதிபரின் தலையாய கடமைகளில் ஒன்று மக்களை ஒன்றிணைப்பது என்றார். பொதுச் சேவையில் தமது 45 ஆண்டுகால சாதனை குறித்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், “நிர்வாகமுறை என்பது தனியாக இருக்க வேண்டும், ஆளும் கட்சி என்பது தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே ஒரு வேறுபாட்டை ஏற்படுத்த வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

தாம் எந்தவோர் அரசியல் கட்சியிலும் இருந்ததில்லை என்றும் அதனால் நடுநிலையான தலைமைத்துவத்தை தம்மால் வழங்க இயலும் என்றும் அவர் தெரிவித்தார். 

சீக்கியக் கோயிலுக்கு வந்திருந்தவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் திரு இங் கோக் சொங்.
சீக்கியக் கோயிலுக்கு வந்திருந்தவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் திரு இங் கோக் சொங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல சிங்கப்பூரர்கள் அதிபர் பதவிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே சமநிலையைக் காண விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத அதிபராக இருக்கும்பட்சத்தில், இந்த சமநிலையை சிறப்பாக அடைய முடியும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் எதிர்கால வெற்றியின் ரகசியங்களுள் ஒன்று மக்களின் மனநலன் என்று குறிப்பிட்ட திரு இங், அது தொடர்பான சவால்களைக் களைவதை அதிமுக்கியமானதாகக் கருதுகிறார். ஒட்டுமொத்த எதிர்கால சிங்கப்பூரின் உற்பத்தித்திறனை அதிகரிக்க மக்களின் மனநலன் முக்கியம் என்றார் அவர்.

சீக்கியக் கோயிலில் உணவருந்தும் திரு இங் கோக் சொங்.
சீக்கியக் கோயிலில் உணவருந்தும் திரு இங் கோக் சொங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீக்கியக் கோயிலில் பக்தர்களுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு அருந்திய திரு இங், பின்னர் கோயிலின் தலைமை குருவிடம் ஆசி பெற்றார். பிறகு கோயிலுக்கு வந்திருந்த 50ற்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடினார். 

குறிப்புச் சொற்கள்