மாணவர்களை வளரும் எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் ஊக்குவிக்கும் முயற்சியில் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு, தாய்மொழிகள் துறை ஏற்பாடு செய்த பயிலரங்குகள் பிப்ரவரி மாதத்திலிருந்து நடைபெற்று வந்ததையடுத்து நேற்று அதன் வெற்றிவிழா உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறியது.
விழாவில் தமிழ் இலக்கியப் பிரியரான முனைவர் இளவழகன் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
சிறுகதை, வசனம், கவிதை ஆகிய எழுத்துப் படைப்புகளைப் படைப்பதற்குரிய உத்திமுறைகளும் நுணுக்கங்களும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன.
முன் அனுபவம் இல்லாத மாணவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் உள்ளூர் எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நாடகக் கலைஞர்கள், உள்ளூர் கவிஞர்கள் ஆகியோர் திறம்பட பயிலரங்குகளை வழிநடத்தினர் என்று தமிழ்மொழிப் பிரிவு, தாய்மொழிகள் துறை, கல்வி அமைச்சை சேர்ந்த பாடத்திட்ட அலுவலர் திருவாட்டி ஆஷிகா சித்திகா குறிப்பிட்டார்.
“தமிழ் மொழியில் ஆர்வமிருந்தும் போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு தயக்கம். என் மொழி வளத்தையும் தன்னம்பிக்கையும் எழுத்துத் திறனையும் போதிய வழிகாட்டுதல் மூலம் வளர்க்க ‘நானும் ஒரு படைப்பாளி’ பயிலரங்கு நல்ல தளமாக அமைந்துள்ளது,” என்றார் வளரும் எழுத்தாளர் சான்றிதழைப் பெற்ற சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவி மீனாஷி பிரியதர்ஷினி.
கவிதை எழுதும் முன் அனுபவம் இல்லாத பயம் இருந்தாலும் ஆசிரியர்களின் ஊக்கத்தாலும் பயிலரங்கை வழிநடத்துபவர்களின் ஊக்கத்தாலும் பயத்தைப் போக்கி தைரியத்துடன் தனது கவிதையைப் படைத்தார் வளரும் கவிஞர் சான்றிதழைப் பெற்ற முரளி விகாஷினி.
“சிங்கப்பூரில் பல சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு ஊழியர்களை பற்றி என் கவிதையை எழுதினேன். அவர்கள் மீதான இரக்கத்தை கவிதை மூலம் படைத்து என் மொழி வளத்தையும் வளர்த்துக்கொண்டேன்,” என்றார் மிலெனியா கல்வி நிலையத்தை சேர்ந்த விகாஷினி.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பயிலரங்கில் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வளரும் கவிஞர், கலைஞர், எழுத்தாளர் ஆகிய சான்றிதழ்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
“தொடர்ந்து தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்க்க இம்மாணவர்களுக்கு வழிகாட்டும் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும். படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையிலும் தமிழ் மொழியை வளர்க்கவும் சமூகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இந்த மாணவர்களுக்கு பலவிதமான அளிப்போம்,” என்று உறுதி பூண்டார் திருவாட்டி ஆஷிகா சித்திகா.
1987ல் கல்வி அமைச்சால் எழுத்துத்திறன் போட்டிகளாகத் தொடங்கப்பட்ட இம்முயற்சி, 2017ல் ‘நானும் ஒரு படைப்பாளி’ என பெயர் மாற்றம் பெற்று மாணவர்களின் படைப்பாற்றலுக்கான ஒரு தளமாக மாறிவிட்டது.
கொவிட் 19 தோற்றுநோய் காரணத்தினால் சென்ற ஆண்டு மெய்நிகர் வழியாக நடத்தப்பட்ட பயிலரங்குகள் இவ்வாண்டு நேருக்கு நேர் நடத்தப்பட்டன.
இக்காலகட்டத்தில் தமிழில் பேசத் தயக்கத்துடன் இருக்கும் மாணவர்களைப் படைப்பாற்றல் மீது அவர்களின் கவனத்தைத் திருப்பினால் மொழியையும் வளர்க்க முடியும் என்று நம்புகிறார் புகிட் வியூ உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் திரு ராமசாமி ஸ்டாலின்.
“வளரும் கலைஞர்கள் பிரிவில் பங்கெடுக்கும் மாணவர்கள் அவர்களின் படைப்பாற்றல் மூலம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முடிகிறது. மொழியை மேம்படுத்தும் வாய்ப்புகள் இதுபோன்ற பயிலரங்குகள் மூலம் சுவாரசியமாக இருந்தால், கண்டிப்பாக மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பார்கள்,” என்றார் திரு ராமசாமி.

