தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்த் தமிழர்களை ஆவணப்படுத்தும் நூல் வெளியீடு

3 mins read
9d9345bf-ae22-482f-9bbc-ea7acf032e3c
நூல் வெளியீடு விழாவில் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம்
multi-img1 of 3

சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் நலனுக்காகவும் 1870களிலிருந்து தற்காலம் வரையில் பங்களித்து வரும் அனைவரையும் ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ முதல் தொகுதியை 2019ல் வெளியிட்டது.

இரண்டாவது தொகுப்பு கடந்த சனிக்கிழமை வெளியீடு கண்டது. 1,056 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் அறிஞர்கள், தொழில் நிபுணர்கள், மறக்கப்பட்ட வீரர்கள் முதலியோர் இடம்பெற்றுள்ளனர். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் கலந்துகொண்டு சிறப்பித்தார். மூத்த துணை அமைச்சரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான டான் கியெட் ஹவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

“சிங்கப்பூரில் தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் செழித்தோங்க இந்த நூல் வெளியீடு ஒரு ஆக்கபூர்வமான முயற்சி. பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவரும் மற்ற கலாசார நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு அவற்றைப் போற்ற வேண்டும்,” என்று திரு தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்தார்.

“நூலை எழுதுவதற்கான திட்டம் 2017ல் உருவானது. ஆனால், கொள்ளை நோய் பரவல் காரணமாக எழுத்தாளர்களைத் தேடும் பணியும் சிரமமாக இருந்தது. மன்றத்தின் மதியுரைஞர் பேராசிரியர் அ. வீரமணி நூலின் எழுத்தாளர்களுக்கு பக்கபலமாக இருந்து கை கொடுத்தார்,” என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் தலைவர் பிருந்தா செல்வம். மன்றத்தில் ஈராண்டுகளாக தொண்டூழியராக உள்ள 42 வயது ஜெயராமன் ஸ்வர்ணலட்சுமி, இந்நூலில் இடம்பெற்றுள்ள 180 ஆளுமைகளில் கோலக் கலைஞர் விஜயா மோகன், கலைஞர் தம்பதியரான வடிவழகன், விக்னேஸ்வரி, முன்னாள் ஊடகவியலாளர் கார்மேகம், நடனக் கலைஞர் சுசீலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐவரைப் பற்றி எழுதியுள்ளார்.

“இவர்களைப் பற்றி நான் மேலும் அறிந்துகொண்டதுடன் அவர்களை அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள என்னால் ஆன பங்களிப்பைச் செய்ததில் மகிழ்ச்சி,” என்றார் திருமதி ஸ்வர்ணலட்சுமி.

கலைத் தம்பதியரான திரு வடிவழகனும் அவரது மனைவி திருமதி விக்னேஸ்வரியும் தாங்கள் இந்த நூலில் இடம்பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளதாகக் கூறினர். “இளம் தலைமுறையினருக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கும் இந்நூல் சென்று சேர வேண்டும். சிங்கப்பூரில் தமிழர் வரலாற்றை அவர்கள் அறிந்துகொள்ள இது உதவும்,” என்றனர் அவர்கள்.

திரு வடிவழகனுக்கு இளம் வயதிலே அவரது தந்தை திரு பி.வி. சண்முகசுந்தரம் தமிழ் மொழியில் ஆர்வத்தைப் புகுத்தினார். தந்தை மறைந்துவிட்டாலும் அவர் ஏற்படுத்திய தமிழ் ஆர்வம் அவரிடம் மேலும் வளர்ந்துகொண்டே உள்ளது. நூலில் திரு பி.வி. சண்முகசுந்தரத்தின் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் துணைப் பொருளாளரான 20 வயது கெஜா ஸ்ரேயா ராஜ்குமார், இந்நூலில் தனது முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் யுகி விஜய் சிங்கா பற்றி எழுதியுள்ளார்.

“இந்நூலின் முதல் தொகுதியில் எனது தாயாருடன் சேர்ந்து எழுதியிருந்தேன். ஒருவரைப் பற்றிய விவரங்களை எழுதும்போது, கோர்வையாக எழுத வேண்டும்.விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். முயற்சி எடுத்து எழுதினேன். இப்போது இன்னும் பலரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து எழுத ஆர்வம் பிறந்துள்ளது,” என்று பகிர்ந்துகொண்டார் நான்கு ஆண்டுகளாக மன்றத்தில் தொண்டாற்றும் ஸ்‌ரேயா.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் நூலை வாங்கிச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்