அதிபர் தேர்தலில் குடியிருப்பாளர்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாகக் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்; வாக்குச்சீட்டில் அவர்கள் தங்களது தெரிவைத் தெளிவாகக் குறிப்பிட ஏதுவாக புதிய முத்திரைகள் பயன்படுத்தப்படும்.
அத்துடன், வாக்குச்சாவடிகளில் வாக்காளர் வரிசை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வாக்காளர் அட்டையில் உள்ள விரைவிணைப்புக் குறியீடு (கியூஆர்) போன்ற வசதிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் துறை திங்கட்கிழமை அறிவித்த வாக்களிப்பு ஏற்பாடுகளில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகளில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மூலமாக இந்த மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.
அந்தத் தேர்தலில் தானாக மைநிரப்பிக்கொள்ளும் ‘X’ பேனாக்கள் மூலம் வாக்குச்சீட்டில் சரியாக முத்திரையிட முடியவில்லை என்று பொய்யான தகவல்கள் பரவின.
இந்நிலையில், இம்முறை அகலமான, தெளிவாகக் குறியிடக்கூடிய புதிய வாக்களிப்பு முத்திரைகள் (X முத்திரைகள்) அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
ஆயினும், அம்முத்திரையைப் பயன்படுத்துவது கட்டாயமன்று. வாக்காளர்கள் தங்களது சொந்தப் பேனாவையும் கொண்டுவரலாம்.
வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு 1,264 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தேர்தல் துறை அறிவித்துள்ளது. 2020 பொதுத் தேர்தலில் 1,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் வாக்குச்சாவடிகள் மூலம், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்படும் சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கையும் 2,150ஆகக் குறையும். முன்னர் இது 2,400ஆக இருந்தது.
வாக்காளர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதல் பதிவு முகப்புகளும் வாக்குச்சீட்டு முகப்புகளும் அமைக்கப்படும்.
ஏறக்குறைய 36,000 தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சென்ற முறை இந்த எண்ணிக்கை 30,000ஆக இருந்தது.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் ‘VoteQ’ இணையத்தளம் மூலம் வாக்குச்சாவடிகளில் கூட்டம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ள முடிந்தது. ஆயினும், அந்த இணையத்தள முகவரியையும் அதற்கான வழிகாட்டுக் குறிப்பையும் வாக்காளர்கள் நினைவில்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில், இம்முறை ‘VoteQ’ இணையத்தளத்திற்கு நேரடியாகச் செல்ல ஏதுவாக, சிங்பாஸ் செயலியில் உள்ள மின்வாக்காளர் அட்டையில் அதன் மீஇணைப்பு (hyperlink) கொடுக்கப்பட்டிருக்கும்.
அத்துடன், வாக்காளர் அட்டையில் உள்ள ‘கியூஆர்’ குறியீட்டை வருடியும் வாக்குச்சாவடி கூட்ட நிலவரத்தை அறிந்துகொள்ளலாம்.
தேர்தலில் போட்டி இருப்பின், வேட்புமனுத் தாக்கல் நாளுக்குப் பிறகு வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இப்போதைக்கு முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், தொழில்முனைவர் ஜார்ஜ் கோ, அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைவர் இங் கோக் சோங் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

