இவ்வாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அஞ்சல் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல் துறை முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டிலுள்ள கிட்டத்தட்ட 160 சிங்கப்பூரர்களைக் கொண்டு அஞ்சல் வாக்களிப்பு முறையைச் சோதித்துப் பார்த்ததாகத் தேர்தல் துறை திங்கட்கிழமை தெரிவித்தது.
அவர்களில் பெரும்பாலோர் அஞ்சல் வாக்களிப்பிற்குப் பதிவுசெய்வதும் தங்களது அஞ்சல் வாக்குச்சீட்டைப் பதிவிறக்கம் செய்வதும் அதனை அச்செடுப்பதும் எளிதாக இருந்தது என்று கூறியதாகத் தேர்தல் துறை தனது இணையத்தளம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
அஞ்சல் வாக்களிப்புச் சேவைகளின் செயல்முறை குறித்துப் புரிந்துகொள்ள ஏதுவாக, சிங்கப்பூர்த் தூதரகங்கள், பொருளியல் வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் அனைத்துலகக் கட்டமைப்பு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகிய அமைப்புகளின் வெளிநாட்டு அலுவலகங்கள் மூலமாகவும் தேர்தல் துறை இன்னொரு சோதனைத் திட்டத்தைச் செயல்படுத்தியது.
சில கடித உறைகளில் அஞ்சல் முத்திரையை இல்லாதது இந்தச் சோதனை நடவடிக்கைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூரில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதற்குமுன் அஞ்சல் ஓட்டுகள் பதிவுசெய்யப்பட்டன என்பதை உறுதிசெய்வதற்கு அஞ்சல் முத்திரைகள் முக்கியம்.
வேறு சில வட்டாரங்கள் அல்லது நாடுகளில் இருந்து வரும் வாக்குச்சீட்டுகள் தாங்கிய கடித உறைகள் சிங்கப்பூர் வந்துசேர கூடுதல் காலம் தேவைப்படலாம்.
இதனால், தங்களது வாக்குச்சீட்டு அடங்கிய கடித உறைகளில் அஞ்சல் முத்திரையிடப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக, சில குறிப்பிட்ட வட்டாரங்கள் அல்லது நாடுகளைச் சேர்ந்த அஞ்சல் வாக்காளர்கள் தங்களது கடித உறைகளில் அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்புவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் தேர்தல் துறை ஆலோசனை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வட்டாரங்களாவன:
மத்தியக் கிழக்கு: இஸ்ரேல், ஓமான், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
ஓஷெனியா: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
தென்கிழக்காசியா: கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்னாம்
மற்றவை: பங்ளாதேஷ், பெல்ஜியம், பிரேசில், கானா, இந்தியா, தென்கொரியா, தைவான்.
வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் தங்களது அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அடங்கிய கடித உறைகள், வாக்களிப்பு நாளுக்குக் குறைந்தது பத்து நாள்களுக்குமுன் தேர்தல் அதிகாரியிடம் சென்று சேர்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் அஞ்சல் வழியாக அல்லது வெளிநாட்டிலுள்ள வாக்குச்சாவடியில் நேரடியாக வாக்களிக்கப் பதிவுசெய்துகொள்ளலாம்.
நியூயார்க், வாஷிங்டன் டிசி, சான் ஃபிரான்சிஸ்கோ, லண்டன், ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தோக்கியோ, கேன்பரா, துபாய் ஆகிய இடத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதிபெற, கடந்த மூவாண்டுகளில் குறைந்தது 30 நாள்கள் சிங்கப்பூரில் இருந்திருக்க வேண்டும்.