சிங்கப்பூரும் ஹாங்காங்கும் அணுக்கமான உறவு கொண்டிருப்பதாகவும் ஒன்றோடு ஒன்று ஒத்துழைக்க நிறைய வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இரு நகரங்களுக்கு இடையிலான நெருக்கமான, நீண்டகால உறவுகளை அவரும் ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயும் திங்கட்கிழமை மறுஉறுதிப்படுத்தினர்.
கடந்த ஆண்டு ஜூலையில் ஹாங்காங் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து திரு லீ சிங்கப்பூருக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அவர் சிங்கப்பூர் வந்தார்.
பிரதமர் லீ அவருக்கு மதிய உணவு விருந்தளித்து உபசரித்தார். அப்போது வர்த்தகம், முதலீடு, கலைகள், கலாசாரம், புத்தாக்கம், ஆய்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு தலைவர்கள் சந்திப்பின்போது இரு தலைவர்களும் கடைசியாகச் சந்தித்து இருந்தனர்.
இந்நிலையில், திரு லீயுடன் உரையாடலைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி கொள்வதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
ஒரு நாடு, இரு ஆட்சிமுறையின்கீழ் ஹாங்காங்கின் தொடர் மேம்பாடு, வளமையில் பிரதமர் லீ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
முன்னதாக திங்கட்கிழமை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், திரு லீக்கு காலை உணவு விருந்தளித்து உபசரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரும் ஹாங்காங்கும் ஒன்று மற்றொன்றுக்கு துணைநிற்கும் பங்கைக் கொண்டிருப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.
“நாங்கள் ஆகச் சிறந்த செயல்முறைகளைப் பகிர்கிறோம். ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். பொது, தனியார் துறைகளில் தலைவர்களுக்கு இடையே பல பரிமாற்றங்களைக் கொண்டுள்ளோம்,” என்றார் திரு வோங்.
இதற்கிடையே, திரு லீயின் பயணத்தின்போது வர்த்தக ஊக்குவிப்பு, நிதித் தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில்முனைவு, ஆய்வு மேம்பாடு போன்ற அம்சங்களில் சிங்கப்பூர், ஹாங்காங் நிறுவனங்களுக்கு இடையே ஏழு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.

