துவாஸ் இரண்டாம் பாலத்தில் வேதிப்பொருள் பேரிடர் நிகழ்ந்தால் அதைச் சந்திக்கும் அளவுக்குத் தாங்கள் ஆயத்தமாக இருக்கிறோமா என்பதைக் கண்டறிய, சிங்கப்பூர்-மலேசியா நாடுகளைச் சேர்ந்த சுமார் 16 அமைப்புகளும் நிறுவனங்களும் புதன்கிழமை அந்தப் பாலத்தில் பயிற்சி ஒன்றை நடத்தின.
கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முதன்முதலாக அந்தப் பயிற்சி நடந்தது. பயிற்சி இத்துடன் 13வது முறையாக நடந்தப்பட்டுள்ளது.
பாலத்தில் வேதிப்பொருள் கொட்டிவிட்டால் அதை உடனடியாக சமாளிக்கும் திட்டம் ஒன்றை சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியமும் மலேசியாவின் சுற்றுலாத் துறையும் தீட்டி இருக்கின்றன.
அந்தத் திட்டம் எந்த அளவுக்கு ஆற்றலுடன் இருக்கிறது என்பதைச் சோதிக்க பயிற்சி நடத்தப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளும் இந்த விவரங்களைத் தெரிவித்தன.
சிங்கப்பூரைச் சேர்ந்த காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உள்ளிட்ட நான்கு அமைப்புகளும் அரச மலேசிய காவல்துறை, சுகாதாரத் துறை போன்றவை உள்ளிட்ட மலேசியாவின் 12 அமைப்புகளும் பயிற்சியில் பங்கேற்றன.
ஹைடிரோகுளோரிக் அமிலம் இருந்த 10 பீப்பாய்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சிங்கப்பூருக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த லாரிக்கு முன் பக்கம் ஒரு காரும் மோட்டார்சைக்கிளும் சென்றுகொண்டு இருந்தன. அப்போது திடீரென்று காரும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்கு உள்ளாகிவிட்டன.
அந்த விபத்தில் சிக்காமல் அதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் லாரி ஓட்டுநர் தன் வாகனத்தைத் திருப்பினார்.
அப்போது அந்த லாரி அந்தப் பாலம் ஓர தடுப்பில் மோதியது. அமிலம் இருந்த ஐந்து பீப்பாய்கள் உருண்டு சாலையில் விழுந்தன. பாலத்தின் சிங்கப்பூர் பகுதிக்குள் உருண்டு வந்த இரண்டு பீப்பாய்கள் திறந்துகொண்டன.
தொடர்புடைய செய்திகள்
மூன்று பீப்பாய்கள் பாலத்தின் மலேசிய பக்கத்தில் கிடந்தன. அவற்றில் இரண்டு ஒழுகத் தொடங்கின. லாரி சிப்பந்தியும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரும் கடுமையாகக் காயம் அடைந்தனர்.
கார், லாரி ஓட்டுநர்கள் இலேசாகக் காயமடைந்தனர். இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததுபோல் பாவனையாக பயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சி பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைமை நிர்வாகி வோங் காங் ஜெட், அவசரகால சமாளிப்புத் திட்டத்தைத் தீட்டி அதை இரண்டு நாட்டு அமைப்புகளும் பரிசோதித்துப் பார்த்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
இரு நாடுகளின் அமைப்புகளும் ஒத்துழைத்து செயல்பட்டதை தான் பாராட்டுவதாக மலேசியாவின் சுற்றுப்புறத் துறை தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்திப் வான் ஜப்பார் தெரிவித்தார்.