வடகொரியாவுக்கு 500 போத்தல் வாசனைத் திரவியங்களைச் சட்டவிரோதமாக விநியோகித்த நிறுவனத்திற்குப் புதன்கிழமை $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஐக்கிய நாட்டு நிறுவனம் விதித்துள்ள தடைகளால், சிங்கப்பூரிலுள்ள நிறுவனமோ அல்லது தனிநபரோ, ஆடம்பரப் பொருள்களை வடகொரியாவுக்கு விநியோகிப்பது, விற்பது அல்லது அனுப்புவது சட்டவிரோதமாகும்.
சருமப் பராமரிப்புப் பொருள்களை விநியோகிக்கும் ஷெசாத் டிரேடர்ஸ் நிறுவனம் வடகொரியாவுக்கு விநியோகித்த வாசனைத் திரவியத்தின் மொத்த மதிப்பு $2,950.
நிறுவனத்தின் மீதான அதே குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நிறுவனத்தின் இயக்குநரும் பங்குதாரருமான 60 வயது திரு முகம்மது ரஃபிக் முகம்மது இஷாக்குக்கு குற்றச்சாட்டிலிருந்து தற்காலிக விடுதலை அளிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான தகவல் அல்லது ஆதாரம் பிற்பாடு கிடைத்தால், அவர்மீது மீண்டும் வழக்கு தொடரப்படலாம்.
வடகொரியரான ஐரீன் சோ, 2013 மார்ச் 13 அன்று, ஷெசாத் நிறுவன ஊழியரான முகம்மது வஹாப் திலாவரை சிங்கப்பூரில் சந்தித்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஜோர்டன் லீ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வடகொரியாவைச் சேர்ந்த ஹேயாங் டிரேடிங் நிறுவனத்திற்காக வாசனைத் திரவியம் வாங்க விரும்பியதாக திரு வஹாப்பிடம் திருவாட்டி சோ கூறினார்.
விலை பேசிய பிறகு, விற்பனை உறுதி செய்யப்பட்டது. திருவாட்டி சோ ரொக்கமாகப் பணம் கொடுத்தார். திரு ரஃபிக் விற்பனையை அங்கீகரித்தார். விலைச்சீட்டில் ஹேயாங் நிறுவனம் வடகொரியாவைச் சேர்ந்ததென்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
பிறகு, வாசனைத் திரவியங்களையும் மற்றப் பொருள்களையும் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்க எலுவா இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் திருவாட்டி சோ ஏற்பாடு செய்தார். இந்நிறுவனம் மல்லர்+பார்ட்னர் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி மார்ச் 17ஆம் தேதி பொருள்களை அனுப்பி வைத்தது.